என்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை

37

என்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற மத்திய அரசின் முடிவு, அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றி, தமிழ்நாட்டை மேலும் வஞ்சிப்பதற்கே வழிவகுக்கும்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு நிதி தேவைப்படுவதாலேயே அதன் 5 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அதாவது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு போதுமான நிதி அந்நிறுவனத்திடம் இல்லை என்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை அமைச்சர் நாராயணசாமி உருவாக்குகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.
நெய்வேலி நிறுவனத்தின் இலாபத்தைக் கொண்டு உத்தரபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் நிலக்கரி சுரங்கங்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உ.பி. மாநிலம் கதம்பூரி்ல் அம்மாநில மின் துறைஅமைப்பான உத்தர பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாமுடன் என்.எல்.சி. செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அங்கு 1,980 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை முன்னெடுத்தவர், என்.எல்.சி.யின் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்த அன்சாரி என்பவர். அவர் தனது மாநிலத்தின் மின்சாரத் தேவைக்காக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிதி ரூ.5,600 கோடி (அத்திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.11,000 கோடியாகும்) செய்ய ஒப்பந்தம் போட்டார். இதற்காக நெய்வேலியின் பங்குகள் விற்கப்பட்டதா என்ன? இல்லையே. இப்போது மட்டும் பங்குகளை விற்று விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி வந்தது?

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பார்சிங்கரில் அமைக்கப்படும் சுரங்கத்திற்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் இயங்கி ஈட்டிய வருவாய் முதலீடு செய்யப்படுகிறது. இங்கே ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தலில் அப்பகுதி மக்கள் கேட்கும் இழப்பீட்டை தர மறுத்து திட்டத்தையே முடக்கிய நெய்வேலி நிர்வாகம், பார்சிங்கர் சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 250 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கியுள்ளது! தமிழ்நாட்டு மக்களுக்குத் தண்ணீர் காட்டும் என்.எல்.சி. நிர்வாகம், மற்ற மாநில மக்களுக்கு வாரி வாரி வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.5,000 கோடி வருவாய் ஈட்டி வருகிறது என்.எல்.சி.நிறுவனம். ஆனால், பல ஆண்டுகளாக கடும் உழைப்பைத் தந்துவரும் 8,500 தொழிலாளர்களை இன்னமும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைத்து சாகடிக்கிறது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் தொழிலாளர்களை வஞ்சித்து, பிற மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு என்.எல்.சி.யின் நிதியை கொண்டு செல்வதை தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது. முதல் வேலையாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். நெய்வேலி விரிவாக்கத்தை ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்க வேண்டும். அத்திட்டத்தை விரைந்து முடித்து, 1,000 மெகா வாட் மின்சார உற்பத்தியைத் தொடங்க வேண்டும். நெய்வேலியிலேயே தொடங்கவுள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.

மின்சார தட்டுப்பாட்டால் தமிழ்நாடு திணறிக்கொண்டிருக்கிறது, அதற்கு உதவிட வக்கற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டின் முதலீட்டை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஇராம கோபாலானுக்கு நாம் தமிழர் கட்சி பதில்
அடுத்த செய்திடி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார்