தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு

8

தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு

ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழீழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது என்று சென்னையில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையர் அலுவலக அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி மனு அளித்தது.
இலங்கையில் தங்களின் உயிருக்கும் வாழ்விற்கும் அச்சுறுத்தல் உள்ள நிலையிலேயே அங்கு வாழ்ந்த வந்த தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர். அப்படி தங்களுடைய எதிர்காலத்திற்காக ஆஸ்ட்ரேலியா நோக்கிச் சென்ற தமிழீழ அகதிகள் 46 பேர், அவர்கள் பயணித்த படகு நடுக்கடலில் பழுதான நிலையில் சிங்கப்பூர் வணிக கப்பலால் காப்பாற்றப்பட்டு, துபாயில் உள்ள ஐ.நா. அகதிகள் அலுவலகத்தி்ல் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 19 பேரை அமெரிக்காவிற்கும், சுவீடனுக்கும் அனுப்பி வைத்த ஐ.நா.அகதிகள் அலுவலகம் 6 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்களில் இரண்டு பேரை விசாரணை என்ற பெயரில் இலங்கை காவல்துறை துன்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் துபாயிலுள்ள மேலும் 19 பேரை அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்காமல், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்க துபாய் காவல் துறை முடிவெடுத்துள்ளது. இப்படிப்பட்ட முடிவு, ஐ.நா. அகதிகள் உடன்படிக்கைக்கும், ஐ.நா.வின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும் எதிரானது என்று கூறி, அந்த 19 பேரை எக்காரணம் கொண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுக்கொண்டு ஒரு மனுவை ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கும், ஐ.நா.அகதிகள் ஆணையருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவின் பிரதிகள் சென்னையிலுள்ள ஐ.நா. அகதிகள் ஆணையர் அலுவலக அதிகாரி ஆர். வித்ஜீய பாரதியிடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வழங்கினார்.

 

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 19 அகதிகளை இலங்கைக்கு திரும்பவும் அனுப்பி வைக்கக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது அவர்களை கொலைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஒப்பானது என்றும் ஐ.நா. அதிகாரியிடம் சீமான் கூறினார். இந்த சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகர், சர்வதேச தொடர்பாளர் அய்யநாதன், வழக்கறிஞர் இராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன், செய்தி தொடர்பாளர் ஆவல் கணேசன், காஞ்சி மாவட்ட செயலர் இராசன், மத்திய சென்னை மாவட்ட செயலர் பெரியார் அன்பன் ஆகியோர் உடனிருந்தனர். 

சி. தங்கராசு

தலைமை நிலைய செயலர்