போராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

41

உணர்வெழுச்சி போராட்டங்கள் மீது  வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

நமது ரத்த உறவுகளான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசினை  சர்வதேச சமூகம் தண்டிக்கக் கோரியும் ,  சுதந்திர தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்திட கோரியும்

கடந்த 08-04-2013 அன்று  மதுரை தானி( ஆட்டோ) ஓட்டுனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்திய  மதுரை மாவட்ட  வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மதிப்பிற்குரிய வழக்கறிஞர். ஏ.கே இராமசாமி மீதும், மார்க்ஸ்சிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர்  மதிப்பிற்குரிய மீ.த.பாண்டியன் மீதும் தமிழக அரசின் சார்பில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நமது தொப்புள் கொடி சொந்தங்களான ஈழ உறவுகளுக்காக உணர்வெழுச்சியோடு போராடும்  உணர்வாளர்கள் மீது இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது போன்ற நடவடிக்கைகளால் தமிழக மண்ணில் ஏற்பட்டு வரும் உணர்வெழுச்சி அலையினை ஒடுக்க முடியாது என்றும் நாம் தமிழர் கட்சி  தெரிவிக்கிறது.

இன உணர்வோடு போராடியவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்காணும் வழக்குகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தமிழக அரசினை வலியுறுத்துகிறது.

   செந்தமிழன் சீமான்,

    தலைமை ஒருங்கிணைப்பாளர்,