கடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்

33

கடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்:

சென்னை கடற்கரையில் ஏழை, எளிய மக்களால் நடத்தப்பட்டு வந்த சிறிய கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரும் பொது நல வழக்கையடுத்து, அங்குள்ள கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 உலகிலுள்ள கடற்கரைகளில் சென்னை கடற்கரை இரண்டாவது மிகப் பெரிய, அழகிய கடற்கரையென்றும், அது அயல் நாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது என்றும், ஆனால், அங்கு நடத்தப்படும் சிறிய உணவுக் கடைகளை நடத்துவோர் போடும் கழிவுகளால் சுற்றுச் சூழல் கெடுகிறது என்றும் கூறி, கடற்கரையின் அழகை காப்பாற்ற, இப்படிப்பட்ட உணவுக் கடைகள் எதுவும் அங்கு இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடையை விதித்துள்ளது.

இந்தப் பொது நல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இப்படிப்பட்ட சிறிய உணவுக் கடைகளுக்கு எதிராக இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறது. ஒன்று, இந்தக் கடைகள் யாவும் எவ்வித அனுமதியின்றி இயங்கி வருவது மட்டுமின்றி, இக்கடைகளி்ல் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்றவை என்றும், அது உடல் நலத்திற்கு கேடானது என்றும் கூறியுள்ளது. இந்த இரண்டு விடயங்களும் கவனிக்கத்தக்கவையே. ஏனெனில் கடற்கரைக்கு வரும் சாதாரண மக்கள் வீட்டுப் பிள்ளைகள், இப்படிப்பட்ட உணவுக் கடைகளில் விற்கப்படும் பொருட்களை விரும்பு வாங்கி சாப்பிடுகின்றனர். அவைகளால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகிறது.
காற்று வாங்கவும், சுற்றுலாவிற்கு வரும் மக்களின் நலனை பாதுகாக்கும் அதே வேளையில், இந்தக் கடைகளை நடத்தி, தங்களின் அன்றாட வாழ்வை ஒப்பேற்றிக்கொண்டுவரும் ஏழை எளிய மக்களின் நலனையும் அரசும், சென்னை மாநாகராட்சியும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். அங்கு கடைகளை நடத்த உரிய உரிமங்களை வழங்கி, அவர்கள் விற்கும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருப்பதை சென்னை மாநகராட்சி உறுதி செய்திடல் வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் உணவுக் கழிவுகளை கடற்கரை போட்டுவிட்டுச் செல்லாமல், அவைகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில்தான் போட வேண்டும் என்பதையும் மாநகராட்சி உறுதி செய்யலாம். இதனை செய்வதன் மூலம் மட்டுமே கடற்கரையின் இயற்கை அழகையும், அதே நேரத்தில் கடை நடத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும். அப்படி செய்வதே பொது நலமாக இருக்கும்.

 

அதை விட்டுவிட்டு, கடற்கரையின் அழகை பாதுகாக்க வேண்டும் என்று கூறும் மேல்தட்டு வகையறா மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற அரசும், மாநகராட்சியும் முற்பட்டால், அது பொது நலம் ஆகாது, தனியாரின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு தலைப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கும்.

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திகாவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திதிடீர் ரயில் மறியல் – புதுவையில் பரபரப்பு