உ.பி. மின் திட்டத்தில் என்.எல்.சி. முதலீடு செய்வது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம்: நாம் தமிழர் கட்சி

46

உத்தர பிரதேச மாநிலத்தில் 1,980 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் மிகப் பெரிய அனல் மின் திட்டத்திற்கு அம்மாநில அரசு நிறுவனமான உத்தர பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாமுடன், நெய்வேலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் என்.எல்.சி. நிறுவனம் ரூ.5,600 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உ.பி.மாநிலம் கதம்பூரில் ரூ.11,088 கோடி ரூபாயில் நிறுவப்படவுள்ள அந்த அனல் மின் நிலையத்திற்காக அடிக்கல் நாட்டு விழா கடந்த திங்கட்கிழமை நடந்தேறியுள்ளது.

1964ஆம் ஆண்டு நெய்வேலியில் தொடங்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம், இன்று வரை மிக இலாபகரமாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றேறக்குறைய ரூ.5,000 கோடி மொத்த வருவாய் ஈட்டிவரும் என்.எல்.சி. நிறுவனம், நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு நெய்வேலியிலேயே மேலும் 1,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களை உருவாக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், நெய்வேலியில் கிடைத்த வருவாயை உ.பி. மாநிலத்தின் மின் திட்டத்திற்கு 51 விழுக்காடு முதலீட்டுப் பங்கை அளித்து நிறைவேற்ற முற்படுவது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகமாகும். தமிழ்நாடு போதுமான மின் உற்பத்தியின்றி ஒரு பற்றாக்குறை மாநிலமாக இருந்துவரும் நிலையில், தொழில் ரீதியாக வேகமாகவும் வளர்ந்து வருவதாலும், அயல் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாலும் நமது எதிர்கால மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தும் வருகிறது. இந்த நிலையில், நெய்வேலியிலோ அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியிலோ தனித்தே மேலும் பல அனல் மின் நிலையங்களை தொடங்காமல், உ.பி. மாநில மின் திட்டத்தில் ரூ.5,600 கோடியை முதலீடு செய்வது எவ்வாறு நியாயமாகும்?

அதுமட்டுமின்றி, மிக இலாபகரமாக இயங்கிவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்பகுதிவாழ் மக்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 13,000 பேர், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 3ஆம் தேதிவரை 44 நாட்களாக போராடி வந்தனர். அவர்களில் 4,600 பேரை மட்டும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்வதாக வாக்களித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்களின் முக்கியமான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை இறுதிவரை ஏற்கவில்லை. நியாயமான இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்தான் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களை விட அதிகாரிகள் அதிகம் பேர் பணியாற்றி வரும் அதிசயம் உள்ளது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள் 6,504 பேர் மட்டுமே. ஆனால் உயர் மட்டத்திலிருந்து பணியிடம் வரை பணியாற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை 11,930 ஆகும்! நிரந்தர தொழிலாளர்கள் + ஒப்பந்தப் தொழிலாளர்கள் என்று 20,000 தொழிலாளர்களின் கடும் உழைப்பால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்காமல், உ.பி.க்கு ஒடுவது ஏன்? தற்போது என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவராக உள்ள அன்சாரியின் சொந்த ஊர் உ.பி. மாநிலம் கதம்பூர் என்பதால், அவரது சொந்த ஆர்வத்தின் காரணமாக இத்திட்டம் நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள நிலக்கரி வளத்தை தோண்டி எடுக்கும் திட்டத்திற்கு நிலம் கையெப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அத்திட்டத்திற்கு நிலத்தை அளிக்கும் தங்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறது ஜெ.என்.சி., ஆனால் இராஜஸ்தான் மாநிலம் பார்சிங்கர் எனுமிடத்தில் என்.எல்.சி. நிறுவனம் அமைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு, இங்கு ஜெயங்கொண்டம் மக்களுக்கு அளிக்கும் இழப்பீடை விட 250 விழுக்காடு அதிகம் கொடுக்கிறது. வேலை வாய்ப்பு உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கிறது!

தமிழ்நாட்டின் வளத்தில் கிடைத்த இலாபத்தை உ.பி.யில் கொண்டு முதலீடு செய்வதற்கு நெய்வேலி தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உ.பி. மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த நாளன்று நிரந்தரத் தொழிலாளர்களுக்கு முறையே ரூ.10,000மும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2,000மும் கொடையாக வழங்கியுள்ளது நெய்வேலி நிர்வாகம்! அதாவது காசை கொடுத்து வாயை அடைத்துள்ளது என்.எல்.சி.! இதனை தமிழகம் அனுமதிக்க வேண்டுமா? தமிழக அரசு இதைத் தட்டிக்கேட்க வேண்டாமா? நெய்வேலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வயிற்றில் அடித்துவிட்டு, உ.பி. மின் திட்டத்திற்கு முதலீடா? இதனை தமிழக அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுத்து நிறுத்த வேண்டும். இதனை பெரும் பிரச்சனையாக்கி நெய்வேலி மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி நெய்வேலியில் போராட்டம் நடத்தும்.