காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

611

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவானது அதற்கு நேரெதிரான விதிகளைக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் இயற்கை வளங்களான காடுகளை அழித்தொழிக்கும் வகையில் வனப்பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர முயலும் ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்புச் சட்டத்தை முற்றுமுழுதாக நீர்த்துப்போகச் செய்யும் வகையிலேயே, புதிய வனபாதுகாப்புச் சட்டத்திருத்த வரைவு – 2021 ஐ ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அதன் விதிகளைப் படிக்கும்போதே இந்தச் சட்டத்திருத்த வரைவு எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. காடுகளுக்குள் தொடர்வண்டி, சாலைகள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே ஒப்புவிக்கப்பட்ட இடங்களாக இருப்பினும், விரிவாக்கம் செய்யும்போது வனத்துறை அனுமதி பெறுவது கட்டாயமென்று இதுவரை நடைமுறையில் இருந்த விதியை மாற்றி, அனுமதி பெறத் தேவையில்லை என்று திருத்தியிருப்பதும், காடுகளில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் எவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற விதியை தளர்த்திக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்ததோடு, வன எல்லை என்பதிலிருந்து அவற்றை விடுவிக்கலாம் என்பதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்க உதவுமா? அதிகரிக்க உதவுமா? என்பதை முதலில் ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று, காடுகளை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது பூமிக்கடியில் பக்கவாட்டில் போடப்படும் ஆழ்துளை குழாய்கள் மூலம் வனத்தின் நடுவே இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதும், காடுகளில் ஆராய்ச்சி செய்வதற்காகவும், தகவல்களைச் சேகரிப்பதற்காகவும், அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க அனுமதி அளித்திருப்பதும் காடுகளின் உயிரோட்டத்தைக் கெடுத்து, அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தை முற்றாக அழிப்பதோடு உணவுச் சங்கிலியையும் பெருமளவில் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் அடர்ந்த காடுகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு வனத்துறை அனுமதியைப் பெற வேண்டாம் என்ற சட்டத்திருத்த விதியானது, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த ஒரு சிக்கலான திட்டத்தையும் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் எளிதாக வனத்துறை அனுமதி பெறாமலே முறைகேடாகச் செயல்படுத்தவும் வழியேற்படும். மேலும், காடுகளில் உள்ள மரங்களுக்கும், உயிரினங்களுக்கும் நேரடியாக எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது வனப்பகுதிகளுக்குள் செயல்படுத்தப்படும் எல்லாத் திட்டங்களும் காடு சார்ந்த திட்டங்களாகவே கருதப்படும் என்ற விதியும் காடுகளின் அடர்த்தியையும், அதன் இயற்கை சமநிலையையும் சீர்குலைக்கவே உதவும். நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி முறையற்ற வகையில், இதுபோன்ற புதிய புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்து மண்ணின் வளத்தையும், மக்கள் நலத்தையும் கெடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகார போக்கானது நாட்டிற்குப் பேராபத்தாய் முடியும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

ஏற்கனவே நாட்டின், நில வளம், நீர் வளம், கடல் வளம், கனிம வளம் ஆகியவற்றைப் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மூலம் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் தாரைவார்த்துள்ள பாஜக அரசு, தற்போது மீதமுள்ள இயற்கை வளங்களான காடுகளையும் தாரைவார்ப்பதற்காகக் கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்த வரைவைச் செயல்படுத்த எக்காரணம் கொண்டும் நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. காடுகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றை அழித்துச் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் விதிகளை எதிர்த்து வரும் நவம்பர் முதல் தேதிக்குள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை, ஒன்றிய அரசிற்குக் கருத்துக்கேட்பு தளத்தின் வாயிலாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே மண்ணிற்கும், மரங்களுக்கும், மக்களுக்கும் பெருந்தீங்கை விளைவிக்கக்கூடிய வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021 ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இச்சட்டத்திருத்த வரைவினை எந்த வகையிலும் ஆதரிக்காது, திரும்பப்பெறச் செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுத்திட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி