லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18

88

பிரித்தானியா தலைநகர் லண்டனில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள்”. 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழர் தாயகப் பகுதியில், சிங்கள அரச படைகளினால் திட்டமிட்ட வகையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களை நினைவு கூர்ந்து மே18 ஆம் திகதியை தமிழீழ தேசிய துக்க நாளாகவும், முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாளாகவும் பிரகடனம் செய்து, முன்னெடுக்கப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு கடந்த மே 18ஆம் திகதி ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நினைவு வணக்க நிகழ்வினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் நிகழ்வினை இறுதிவரை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

நிகழ்வில் ஈகப்பேரொளி முருகதாசனின் தாயார். திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்றிவைக்கப்பட்டது. பிரித்தானிய தேசிய கீதம் இசைக்க பிரித்தானியத் தேசியக் கொடியை அக்ட் நவ் அமைப்பின் பணிப்பாளர் Mr. Graham Wilson அவர்கள் ஏற்றி வைக்க கோடி வணக்கமும் செலுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடி வணக்கப் பாடல் ஒளிபரப்ப தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழ தேசியக்கொடியை மிக நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு.மாறன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடி வணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மண்மீட்புப் போரில் மரணித்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஈகைச் சுடரினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமருமான திரு.உருத்திராபதி சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச் சுடரினை ஏற்றும் போது, நீல வானமும் கருநிரமாகி தனது கண்ணீர்த் துளிகளைத் தூவி முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் உறவுகளுக்கான தனது இரங்கலை தெரிவித்திருந்தது.

தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.விஸ்வனாதன் உருத்திரகுமாரன் அவர்களின் உரை அகன்ற திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

தாயக விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், உலக நாடுகளில் வேள்வித் தீயில் ஆகுதியாகிய தியாகிகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், சிறீலங்கா அரச படைகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி அம்மா அவர்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு தீபம் ஏற்றி, மலர்வணக்கத்தை ஆரம்பித்து வைக்க, வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் வரிசையாகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

வணக்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமர் திரு.உருத்திராபதி சேகர், வெளிவிவகார அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன், பெண்கள் சிறுவர் விவகார அமைச்சர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானியா தமிழர் பேரவையின் தலைவர் உள்ளிட்ட, மூத்த பிரதி நிதிகளும், தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி, இரத்தினேஸ்வரி அம்மா, மற்றும் அதன் உறுப்பினர்களும், பிரித்தானியா தமிழர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும், பாடசாலைகள், கோவில்களின் பிரதிநிதிகளும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் படிக்க…
http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=MUKI&article=4060