என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி

29

என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலுயுறுத்தியுள்ளார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் 13,000 பேரை, ஒப்புக்கொண்டபடி பணி நிரந்தரம் செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் தட்டிக்கழித்து வருவதும், அதனை தட்டிக்கேட்காமல் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நல வாரியங்கள் அமைதி காப்பதும் நீதியற்ற, தொழிலாளர் விரோத போக்காகும்.

தொழிலாளர் பணி நிரந்தரச் சட்டப்படி, ஒரு தொழிலாளர் ஒரு ஆண்டில் 240 நாட்கள் தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ பணியாற்றினாலேயே அவரை நிரந்தரப் பணியாளராக்கப்பட வேண்டும் என்று கூறகிறது. ஆனால், மத்திய அரசு கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் பொருளாதாரக் கொள்கையினால் தொழிலாளர் சட்டங்களுக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் நலனை விட நிறுவனங்களின் நலனையே மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிதாகப் பார்க்கின்றன. இப்படிப்பட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர்.

தஙகள் நிறுவனத்தில் நீண்ட காலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்துவரும் அனைவரையும் பணி மூப்பின் அடிப்படையில் நிரந்தரத் தொழிலாளர்களாக்குவோம் என்று 2008ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒப்புக்கொண்டது. மத்திய அரசு தொழிலாளர் நல வாரியச் செயலர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழியை அளித்தது. ஆனால், ஒப்புக்கொண்டபடி, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், ஒப்புக்கொண்டபடி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை முடக்கும் நோக்கில் வீம்புக்காக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் மீண்டும் மீண்டும் தட்டிக்கழித்த காரணத்தினாலேயே ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் இப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்யப்போகிறது, அதில் எந்த வித ஐயமும் இல்லை. எனவே ஒப்புக்கொண்டபடி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க சட்ட ரீதியான எந்தத் தடையும் இல்லை என்பதுதான் உண்மை. தங்களுடைய நிர்வாகத் திறனைக் காட்டிக்கொள்ள, ஊதியத்தை குறைத்து உற்பத்தியை பெருக்கிக்காட்டிக்கொள்ளும் நிர்வாகத்தின் அடாவடித்தனமான தன்முனைப்பே இந்தச் சிக்கலுக்குக் காரணமாகும். நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக இந்த ஒப்பந்ததத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியமும் இல்லை, பணி உறுதியும் இல்லை. இது நியாயமாகுமா என்பதை மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நல வாரியங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே இதில் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு, நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கட்டளையிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களி்ம் நியாயமான போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.