இலங்கைத் தமிழர்கள் அரசியல் தீர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது மோசடி: நாம் தமிழர் கட்சி

26

இலங்கைக்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான, மோசடிப் பேச்சாகும்.

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் கொடூரமான ஒடுக்குமுறையால் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் அடிமை நிலையில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள், தாங்கள் சுதந்திரமாக, சம உரிமையுடன் வாழ ஒரே வழி தமிழீழ தனி நாடு காண்பதே என்பதை 38 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தீர்மானித்துவிட்டார்கள். 1974ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் தனித் தமிழீழ குடியரசை நிறுவுவதுதான் தமிழர்கள் முழு உரிமையுடன் வாழ ஒரே வழி எனும் தீர்மானத்தை ஈழத் தந்தை செல்வா நிறைவேற்றினார். அதே கோரிக்கையை முன்வைத்து வல்வெட்டித் துறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பிறகு 1977ஆம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தமிழீழ விடுதலையை தேர்தல் முழுக்கமாக வைத்துப் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வடக்கிலும் கிழக்கிலும் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்வினையாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப் போராக சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்றக் குழுவினர், அவர்களின் துயரத்தை போக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப் பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.மட்டக்களப்பில் மட்டும் 45,000 விதவைகளைக் கண்டோம், அவர்களில் 13,000 பேர் 23 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்று கூறும் டி.கே. ரங்கராசன், தங்கள் கணவர்களை கொன்றொழித்த சிங்கள இனவாத அரசுடன் இணைந்து வாழவே தாங்கள் விரும்புவதாக இவரிடம் தெரிவித்தார்களா? தங்களுடைய வாழ்விடங்களில் இராணுவ முகாம்களை அமைத்து, வாழ வழியற்றவர்களாக்கிய சிங்கள அரசு, தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்கும் என்று இவரிடம் கூறினார்களா? தங்களுடைய காணிகளை அபகரித்து தமிழர்கள் பகுதிகளில் குடியேற்றியுள்ள சிங்களர்களுக்கு அளித்த அரசு, தங்களுக்கு அதிகாரப் பகிர்வு தரும் என்று தமிழர்கள் நம்புகிறார்களா? யாரிடம் கதை அளிக்கிறார் ரங்கராசன்?

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் சகஜ நிலை திருப்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூறவில்லையே? இலங்கைத் தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய்விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும். தமிழர்கள் அரசியல் தீர்வைத்தான் விரும்புகிறார்கள், விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது.

தமிழர்களுக்கு எதிராக நடந்த முடிந்த போருக்குப் பின்னர் வடக்கில் மட்டும் 97,000 தமிழ் பெண்கள் விதைவைகள் ஆகியுள்ளனர் என்றால், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்? அப்படியானால் அது திட்டமிட்ட இன அழித்தல் அல்லாமல் வேறென்ன? இந்தக் கொடுமைக்கு காரணமானவர்களை விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றல்லவா ரங்கராசன் கூறியிருக்க வேண்டும்? இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையை மறைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிப்பதேன் என்று கேட்கிறோம். தமிழீழ விடுதலைக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கும் மார்ச்சிஸ்ட்கள், இப்போது இலங்கைக்கு சென்று திரும்பியும் அதையே பேசுகிறார்கள்.

நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை தாங்கி்ச் சென்ற சுஷ்மா சுவராஜ், மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, தனியாகச் சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுபடுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றுச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை எம்.ஜி.ஆர். என்று கூறி புகழந்துள்ளார். சென்னை, சூளையில் தங்கியிருந்தபோது, நடுரோட்டில் துப்பாக்சியால் சுட்டு அப்பாவித் தமிழர் ஒருவரைக் கொன்ற டக்ளஸ் எனும் கிரிமனலுடன், தமிழீழ விடுதலைக்கு துணை நின்ற எம்.ஜி.ஆரை ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் எதுவும் இடம்பெறாததும், இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கை பிரச்சனை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது.

இலங்கைப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று உலகமே பேசுகிறது, விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால் இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் அது குறித்துப் பேசாமல் மவுனம் சாதிக்கிறது. இதிலிருந்து தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் போல், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிக்கின்றன என்பது உறுதியாகிறது. இதனைத் தமிழர்கள் புரிந்துகொண்டு இனிவரும் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்

முந்தைய செய்தி21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்‏!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.