இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்

43

அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது.

கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன.  அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடும்.

ஏனென்றால் அந்த வீரர்களை நாம் எங்களின் பிள்ளைகளாக, எமது சகோதரங்களாக, எங்கள் உயிர்த்தோழர்களாக, எல்லாவற்றையும்விட எமது தேசத்தின் காவல் தெய்வங்களாக நினைத்திருந்தோம். எங்களின் விடுதலைக்காக எண்ணற்ற களங்களில் எதிரிக்கு மரண அடிகொடுத்தவர்கள் அவர்கள்.

கடந்துபோன காலங்களில் பெரும் எடுப்புடன் மிகப்பெரும் படையணியாக வந்த எதிரிகளை மிகச்சிறிய படையணிகளைக்கொண்டே சுற்றி வளைத்து தாக்கி துரத்தியவர்கள் இவர்கள். எமது விடுதலைப் போராட்டத்தின் நம்பிக்கைத் தூண்கள் இவர்கள். அப்படியானவர்கள் வெற்று உடலகங்களாக, உடம்பு முழுதும் இரத்தத்துடன் கிடக்கும் காட்சியை பார்க்கும்போது மனம் மெதுவாக சுருளத்தொடங்கிவிடும்.

ஆனால் இப்படியான உள்ளக்குமுறல்களுக்குள்ளாக சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியதும், ஆராய்வதும் தேவையாக இருக்கின்றது. அந்தப்புகைப்படத்தின் கோரங்கள் நடந்து முடிந்து மூன்று வருடமாகின்றது. 2009ம் ஆண்டின் மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் அது நடந்திருக்கின்றது. அப்படியானால் இந்தப் புகைப்படங்களை மூன்று வருடம் கழித்து இப்போது வெளியிடவேண்டிய காரணங்கள் எவை..? இந்தப் புகைப்படங்களை வெளியிட்ட எல்லா இணையங்களைவிட இந்த புகைப்படங்களை இணையங்களுக்கு வழங்கியவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எவை..?

போர்க்குற்ற ஆதாரம் என்ற வெற்றுக்காரணம் வெளிப்படையாக சொல்லிக்கொண்டே வெளியிடப்படும் இந்த புகைப்படங்களின் உண்மைநோக்கம் ஒரு வகையான உளவியல் தாக்குதல்தான். இத்தகைய உளவியல் தாக்குதல் இன்று நேற்று சிங்களத்தால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது எங்களுக்குள் பெரும் பயம் ஒன்று தோன்றி இருந்தால் அது அவர்களுக்கு வெற்றியே.

அந்தப் படங்களை பார்த்தபோது எமது உள்ளங்களுக்குள் சோர்வு எழுந்திருந்தால் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான். மன உறுதியை இலக்கு வைத்துதான் இப்படியான காட்சிபடுத்தல்கள் நடாத்தபடுகின்றன். தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் இதே வழியினுடாகவே மனங்களுக்குள் பயத்தையும், சோர்வையும் புகுத்துவார்கள்.

இது நேற்று  முன்தினம் தோன்றிய ஒரு உத்தி அல்ல.1983ல் லெப்.சீலனும், வீரவேங்கை ஆனந்தும் மீசாலையில் வீரமரணமாகியபோது குருநகரிலிருந்து வந்திருந்த, இராணுவத்தினரிடம் அவர்களின் உடலங்கள் அகப்பட்டுக்கொண்டன. தமிழீழ வரலாற்றிலேயே மிகச் சிறந்த தளபதியான சீலனின் உயிரற்ற உடலில் இருந்த ‘சாரம்’ அகற்றப்பட்டு வெறும் உள்ளாடையுடன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் போடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு வரிசையாக காண்பிக்கப்பட்டு அதன் ஊடாக வெளியில் இருந்த போராளிகளுக்கு போராடி மடிந்தால் இப்படித்தான் கேவலமாக சவக்கிடங்கில் கிடப்பீர்கள் என்று அச்சுறுத்தலுடன்கூடிய செய்தி போராட்ட மனங்களுக்குள் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 85ல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களுக்கும், நிதிக்கும் பொறுப்பானவரும், மத்தியகுழு உறுப்பினருமான கப்டன பண்டிதர் அச்சுவேலியில் நிகழ்ந்த சிங்களப்படை முற்றுகை ஒன்றுக்குள் போராடி மரணித்தபோது அவனின் வெற்றுடலை எடுத்து சிங்கள அரச தொலைக்காட்சியான ரூபவாகினியில் மணிக்கொருதரம் காட்டியதற்கு பின்னால் ‘உங்களின் மிகமூத்த உறுப்பினரும், பெரும் தளபதியுமான பண்டிதருக்கே இந்த நிலைதான்’ என்ற உளவியல் செய்திதான் இருந்தது.

90களின்போது மண்கிண்டிமலைத் தாக்குதலுக்கு சென்ற போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டபோது 200க்கும் அதிகமான போராளிகள் வீரமரணமாகினர். அவர்களின் உடலங்கள் அனைத்தும் மீட்கப்படமுடியாமல் சிங்கப்படைகளிடம் சிக்கியபோது இப்போது போலவே ஆண், பெண் போராளிகளின் உடலங்களையும் உடையையும் சிதைத்து, கிழித்து மோசமாக புகைப்படங்களாக சிங்களத்தின் தொலைக்காட்சியிலும், அச்சு ஊடகங்களிலும் படம் காட்டப்பட்டதும் வெறுமனே சிங்கள முகாம் மீதான தாக்குதல் முறியடிப்பு என்பதற்கு அப்பால் ‘அனாதைப் பிணங்களாக, சிதைந்து கிடப்பீர்கள்’ என்ற தகவல் இருந்தது.

94ம் ஆண்டில் சந்திரிகா பிரதமாக வந்தபோது நல்லெண்ண அறிகுறியாக விடுதலைப்புலிகள் அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியில் லெப்.கேணல் மல்லிமீது தாக்குதல் நடாத்தி அவன் வீரச்சாவு அடைந்த பின்பும் அவனின் தலையை வெட்டி எடுத்துவிட்டு வெறும் பிண்டத்தை மட்டும் அந்த இடத்திலேயே விட்டுசென்றதற்கு பின்னுக்கு என்ன செய்தி கிடந்து. தளபதி மல்லி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் இரண்டாவது நிலைத் தளபதிகளில் ஒருவர். முக்கியமானவர். அப்படியான முக்கியத்துவம் மிகுந்த புலனாய்வுத் தளபதியின் தலையையும் வெட்டிச்செல்லமுடியும் என்ற உளவியல் செய்திதான் அந்த தலையற்ற உடலை விட்டுசென்றவர்கள் சொல்லாமல் சொன்னது.

அநுராதபுரம் விமானத்தளத்துக்குள் சென்று சிங்களத்தின் நெஞ்சுக்குள் தீவைத்த போராளிகளின் உயிரற்ற உடல்களை நிர்வாணப்படுத்தி உழவு இயந்திரத்தின் பெட்டியில் அடுக்கி வைத்து தெருதெருவாக ஊர்வலம் நடாத்தியது சிங்கள மக்களுக்கான காட்சி காட்டுதல் அல்ல. உங்களின் சாவுகள் உங்களுக்கு உன்னதமானவைஆக இருக்கும். ஆனால் உங்கள் உடல்களை இப்படித்தான் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டுபோவோம் என்ற செய்திதான் சொல்லப்பட்டது.

இப்போது இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படங்களுக்கு பின்னுக்கு தெரிந்தும் தெரியாமலும் நிற்பவர்கள் யார் என்றும் அவர்களின் பிண்ணணியும் நன்கு தெரிகிறது.

முள்ளிவாய்க்காலின் மூன்றம் ஆண்டு நினைவு அண்மிக்கும்போது இவை வெளியிடவேண்டிய தேவைகள் எவை..?

அந்த தேவைகள் யாருக்கு சாதகமானவை?

அவற்றால் பயன்பெறபோகிறவர்கள் யார் யார்..?

காலகாலமாக சிங்களம் செய்துவரும் மனோவியல் தாக்குதலை இம்முறை பொறுப்பெடுத்து நடாத்தும் ஏஜன்டுகள் யார்..?

போர்க்குற்றங்களாகவே இவற்றை வெளியிடுகிறோம் என்கிறார்கள். அப்படியானால்  ஏன் போர்க் குற்றத்ததை விசாரித்த நிபுணர் குழுவுக்கு இந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை. போர்க்குற்றத்தில் சிங்களம் ஈடுபட்டது என நிபுணர் குழு உறுதியாக தெரிவித்து இருக்கும் இந்த பொழுதில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிங்களம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும்படி புலம்பெயர் தமிழர்கள் எழுச்சி கொள்ளவேண்டிய நேரத்தில் இந்த புகைப்படங்கள் வெளிவந்த காரணம் என்ன..?

மூன்று வருடமாகியும் இன்னும் உயிர்ப்புடன் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருவகையான இறுதித்தாக்குதல் இது. நாம் அறிந்தவரையில் இது ஒரு பகுதிதான். கட்டம் கட்டமான உளவியல் தாக்குதல்கள் இனிவரும் சில நாட்களில் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

புலம்பெயர் தமிழர்களை மிக அதிர்ச்சிக்குள்ளும், அந்த அதிர்ச்சிக்கூடாக மௌனத்திலும் புதைந்துபோக வைக்க இதைவிட சில காட்சிகளை வெளியிடும் திட்டங்களும் அவர்களிடம் உள்ளன. அவர்களின் தேவையும் சிங்களத்தினதும், வல்லாதிக் கசக்தியினது தேவையும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை இனம்கண்டு அவற்றை நிராகரிப்பதுதான் இப்போதைய தேவை.

அவர்கள் எமது வீரர்களின் சிதைந்துபோன உயிரற்ற உடல்களை காட்டி எமது மன உறுதியை உடைக்க நினைக்கிறார்கள்.! ஆனால் எமது வீரர்கள் உயிரோடு இருந்து போராடிய நீண்ட வருடங்களில் அவர்கள் காட்டிய வீரத்தையும், விடுதலை மீதான பற்றுதலையும், உறுதியையும்  என்றும் எஙகள் நினைவில் மீண்டும் மீண்டும் வரட்டும்.

எல்லாவற்றையும்விட, மரணித்த பின்னரும் உங்களின் நினைவை சொல்லி நிற்கும் எதையும் விட்டுவைக்க மாட்டோம் என்ற செய்திதான் மாவீரர் துயிலகங்களை சிதைத்துவிட்டு சிங்களம் போராளிகளுக்கும், இனி போராடவரப்போகின்றவர்களுக்கும் சொல்லி வைத்த செய்தி.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு, தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திஇலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!