நாமல் ராஜபக்ஸ வல்வெட்டித்துறையில் – பிரதேசம் எங்கும் படைக்குவிப்பு – மக்கள் வீட்டுக்குள் முடக்கம்.

8

வல்வெட்டித்துறையெங்கும் இன்று படைத்தரப்பு காட்டிய உச்சபட்ச கெடுபிடிகளால்; மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர் இலங்கை அரசின் கல்வி அமைச்சு தேசிய சத்துணவு வழங்கும் திட்டம் நிகழ்வினை பெரும் பிரச்சாரங்களுடன் இன்று வல்வெட்டித்துறையினில் நடாத்தியிருந்தது. நிகழ்விற்காக ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனா ஆகியோர்; சென்றிருந்தனர். வழமையாக யாழ்ப்பாண நிகழ்ச்சிகள் எதனையும் தவற விடாத உள்ளுர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

வல்வெட்டித்துறை சிவகுரு மகாவித்தியாலயம் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களது விஜயத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே பாதுகாப்பு கெடுபிடிகளால் வல்வெட்டித்துறை பரபரப்பாகவே காணப்பட்டது. படைத்தரப்பு காட்டிய கெடுபிடிகளால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுள் முடங்கி போயிருந்தனர்;. பெரும்பாலும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டேயிருந்தன.

நிகழ்வுக்;கு தென்னிலங்கை ஊடகங்கள் பெருமளவில் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். முன்னதாக வல்வெட்டித்துறை சிவகுரு மகாவித்தியாலயம் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி போன்றோர் விருப்பம் கொண்டிருக்கவில்லையென கூறப்படுகின்றது. எனினும் அரச உயர்மட்டம் வல்வெட்டித்துறை சிவகுரு மகாவித்தியாலயத்தினையே வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.