அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது

12

அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  சிறீலங்காவின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த  சிறீலங்கா அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு செயற்படுத்தி வருகின்ற போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.

நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன.  சிறீலங்காவில் போர் உச்சத்தில் இருந்த போதும் கூட நாம் தேர்தல்களை நடத்தினோம்.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.   தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்னணியுடன் எந்த மட்டத்திலும் தேர்தல்களிலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. எனினும் சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே எம்மீது குற்றம் சுமத்துகின்றன.

அத்துடன் 18வது திருத்தச்சட்டத்தின் மூலம்,  சிறீலங்கா ஜனாதிபதியின் பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்குலக நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனிய சான்ஸிலர் ஏஞ்சலா மேர்க்கல், மூன்றாவது முறையாக அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது, மேற்குலக சக்திகள் அதற்கு எதிராக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.

அந்த கட்சியினால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துள்ளது என்று தவறாக எண்ணி செயற்பட்டால் அது மோசமான தவறாகி விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திசனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்?
அடுத்த செய்திதிருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.