‘உச்சிதனை முகர்ந்தால்’ – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லாவை அழவைத்த திரைப்படம்

42

Uchithanai Mugarndhaal 

‘உச்சிதனை முகர்ந்தால்’  – தமிழகத்தில் வாழும் மனிதநேயமுள்ள அனைவரின் மனசாட்சி. ஜவாஹிருல்லா (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்) – திரையரங்கிற்குச் சென்று நான் படம் பார்த்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. இச்சூழலில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் பார்க்க முன்காட்சி திரையரங்கம் வருமாறு சகோதரர் இயக்குனர் புகழேந்தி அழைத்தப் போது என்னால் மறுக்க முடியவில்லை.திரைப்படம் முழுவதும் என் கண்கள் பனித்துக் கொண்டே இருந்தன. ஈழத்தில் நம் தமிழ் சொந்தங்கள் சிங்கள பேரினவாதத்தின் வல்லாதிக்கத்தால் படும் துயரத்தின் ஒரு பகுதியை மிக தத்துருபமாக இப்படம் நம் கண் முன்னே நிறுத்தியது.

சிங்கள பயங்கரவாதிகளின் ஈரமில்லாத கொடுங்கோன்மைக்கு தமிழ் சொந்தங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலும் அதிலும் மிகப் பெரும் துயரங்களை சுமந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களில் ஒருவரான் புனிதாவின் துயரத்தை அங்குலம் அங்குலமாக நம் கண் முன்னே கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தின் அராஜகத்தை நம் நெஞ்சில் பதித்துள்ளார் இயக்குனர் புகழேந்தி.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப் பார்த்த, அதற்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படத்தை பார்த்தாவது அவர்கள் தங்கள் பாவத்திற்கு பிரியாசித்தம் தேடுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேராசிரியர், ஒரு இல்லத்தரசி இரு மருத்துவர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு திருநங்கை, முகம் தெரியாத ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் மனிதநேயத்துடன் புனிதாவை நேசித்து அச்சிறுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தன. இந்தியாவின் சாதாரண குடிமக்களான இவர்கள் பெரும் சவால்களுக்கிடையில் வெளிப்படுத்தும் மனிதநேயம் ஈழத்தில் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களிடம் இருக்கவில்லை. இவர்களது மனப்போக்கைத் தான் பேராசிரியர் நடசேனின் மாமியார் இப்படத்தில் பிரதிபலிக்கிறார்.

திரைப்படம் என்றாலே விரசம் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் சோகத்தை சித்தரித்து நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கையை தூண்டும் வகையில் உச்சிதனை முகர்நதால் அமைந்துள்ளது. இரண்டு திரைப்படங்கள் என் உள்ளத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தி கண்களில் கண்ணீரை நினைக்கும் போதெல்லாம் வரவழைத்தன. அதில் ஒன்று முஸ்தபா அக்காத் தயாரித்த உமர் முக்தார். மற்றொன்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால்.

இது மற்றுமொர் படம் அல்ல. தமிழகத்தில் வாழும் மனிதநேயமுள்ள அனைவரின் மனசாட்சி.

நன்றி – அதிர்வு இணையத்தளம்

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1251

 

 

முந்தைய செய்திசேலம் மாவட்டம் மூங்கில்பாடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேசிய தலைவர் பிறந்த நாள் மற்றும் தமிழர் எழுச்சி நாள் விழா – படங்கள் இணைப்பு
அடுத்த செய்திஇந்தியாவின் அவசர செய்தியை அடுத்தே சீமானின் எல்லைக் கடவு மறுக்கப்பட்டது