“உச்சிதனை முகர்ந்தால்” – புனிதவதி ராஜபக்சேவின் சட்டையை மட்டுமல்ல நம் சட்டையையும் சேர்த்தே உலுக்குகிறாள்!!

69

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தை சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்த பெண் முகப்புத்தகம்(Face Book) எழுதிய கருத்துக்களை இங்கே தருகிறோம் !

இன்று உச்சிதனை முகர்ந்தால் புனிதவதியை பார்த்தேன். மன்னிக்கவும் புனிதவதியுடன் பயணி…த்தேன் என்று தான் சொல்லவேண்டும். போர்க்குற்றத்தின் சிறந்த சாட்சியான புனிதவதி தனக்கு நேர்ந்த துயரத்தை நம்மிடம் சொல்கிறாள். ஒரு படம் என்னை இவ்வளவு பாதிக்கும் என்று இதுவரை நினைத்ததில்லை.

புனிதவதி அழும் பொழுது அழுதேன்.
புனிதவதி சிரிக்கும்பொழுதும் அழுதேன்.

படம் முடிந்து வீட்டுக்கு வரும்பொழுது புனிதவதி என்னுடனேயே என் வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று தான் தோன்றுகிறது. ஒரு பதிமூன்று வயது பெண்ணுக்கு தாயாகும் வயது எனக்கில்லை என்றாலும். புனிதவதியை என் மகளாகவே கருதுகிறேன். நான் மட்டுமல்ல படம் பார்த்த அனைவரும் புனிதவதியை மகளாகவே கருதமுடியும் என்று நினைக்கிறேன். பாதி திரைப்படத்திற்கு மேல் புனிதவதி படும் துயரத்தை இதற்குமேலும் பார்க்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் என் மகள் என்னைத் தவிர வேறு யாரிடம் தனக்கு நேர்ந்ததை சொல்லி அழுவாள் என்று சகித்துக்கொண்டேன்.

ஒரு காட்சியில் ராணுவத்தினர் புனிதாவின் கையிலிருக்கும் குழந்தையை பிடிங்கி எறிந்துவிட்டு புனிதாவை குடிசைக்குள் இழுத்துச்செல்லும் பொழுது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு தீபாவளி இரவில் புனிதவதி தனியாக நகர வீதிகளில் நடக்கும்பொழுது அமுதனாக நடிக்கும் நாய் அவள் பின்னாலே செல்வது வசனங்களால் கேட்ட கேள்வியை விட அதிகம் கேட்கிறது. நடேசன் எனும் பேராசிரியராக சத்யராஜ் அண்ணனும். சார்லஸ் அன்டணி என்ற காவல்துறை அதிகாரியாக சீமான் அண்ணனும் நடித்திருக்கிறார்கள். மருத்துவராக நடித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றாக நடித்திருக்கிறார்.

திருநங்கைகளை இழிவுபடித்தியே வெளிவந்திருக்கும் திரைப்படங்களின் மத்தியில், திருநங்கைகளை இவ்வளவு அன்புள்ளம் கொண்டவர்களாக வேறு எந்த படமும் காட்டவில்லை என்று உறுதியாக கூறமுடியும். ஆட்டோ ஓட்டுனராக நடித்தவர் நெஞ்சில் நிற்கிறார்.

புனிதவதி ராஜபக்சேவின் சட்டையை மட்டுமல்ல நம் சட்டையையும் சேர்த்தே உலுக்குகிறாள்.

அரை குறை ஆடைகளோடு பெண்கள் ஆடும் சினிமாப் படங்களைப் பார்ப்பதை விட இதுபோல ஒரு உணர்ச்சியான படத்தை பார்த்தால் போதும். ஈழத் தாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப் படம் வெற்றியடையவேண்டும். உலகம் எல்லாம் வாழும் தமிழர்கள் இப் படத்தை திரையரங்கு சென்று பார்க்கவேண்டும்.

நன்றி – அதிர்வு இணையத்தளம்
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1369

முந்தைய செய்திதமிழா நீ சிந்தித்துப் பார்!!
அடுத்த செய்தி‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் தொடர்பாக சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சிறப்பு நிகழ்ச்சி – காணொளி இணைப்பு!!