வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் தவிக்கும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் – ஆய்வுக்கட்டுரை

227

அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யார் தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் சீனக் கடற்பரப்பிலேயே தனது ஆளுமையை வைத்திருந்த சீனா, தற்போது இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் அதனுடைய பகுதிகளை அண்மித்த நாடுகளான சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனக்கு சார்பாக்கி பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறது.

இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு கவலையை அளித்த செய்தி கடந்த வாரம்தான் கிடைக்கப்பெற்றது. ஒரு மாத காலத்திற்கு மேலாக இரகசிய வேலைத் திட்டங்களைச் செய்துவந்த சீனா, வெளிப்படையாகவே ஒரு உண்மையை கூறியது. செஷெல்ஸ் என்கிற நாட்டில் தனது கடற்படைத் தளத்தை அமைப்பதாகவே அந்தச் செய்தி அமைந்தது. இதைக் கேட்டதும் சீனாவுக்கு எதிரான நாடுகளும் மற்றும் இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள் ஆச்சரியமடைந்தார்கள் என்பதே உண்மை. செஷெல்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கூட தளம் அமைப்பதை ஆதரித்து பேசியதுடன், சீனக் கடற்படையினர் சோமாலியாவில் இருந்து செயற்படும் கடற் கொள்ளையர்களின் செயற்பாடுகளை முறியடிப்பார்கள் என்று கூறி தனது நாட்டின் நிலைமையை எடுத்துக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் செஷெல்ஸ் நாட்டிற்கு கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பி, குறித்த கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்தியா உதவியது. இந்தியக் கடற்படை முகாம் அமைக்க செஷெல்ஸ் நாடு இடம் கொடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செஷெல்ஸ் நாடென்பது இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ளது. 115 தீவுகளைக் கொண்ட இந்நாடு, ஆபிரிக்காவிலிருந்து கிழக்கே 1500 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவிலிருந்து 3000 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந் நாடானது சிறிலங்காவுக்கு அருகில் அமைந்துள்ள மாலைத்தீவு மற்றும் மடகாஸ்கர் நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்க மற்றும் பிரித்தானியக் கடற்படைத் தளங்கள் அமைந்துள்ள டியாக்கோ கார்சியா என்கிற நாட்டிற்கு அண்மையில் அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 86525 மக்களைக் கொண்ட நாடே இது.

சீனா இப்பிரதேசத்தில் முகாம் அமைப்பதை அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது பிரித்தானியாவோ மனதளவில் விரும்பமாட்டார்கள். இவர்களுடைய கடற்படை நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் சீனக் கடற்படையினர் நேரடியாகவே அருகில் இருந்தவாறே கவனித்துக் கொண்டு இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தென் சீனக் கடற்பரப்பை தனதாக்கிக் கொண்ட சீனா

கடந்த சில காலமாகத் தென் சீனக் கடற்பரப்பில் பதட்ட நிலைகள் பல கோணங்களில் தென்பட்டன. இந்திய – வியட்னாமிய எண்ணை அகழ்வு நடவடிக்கைகள், அதே கடற்பகுதியில் சீன – இந்திய கடற்படை கப்பல்களுக்கு இடையிலான முறுகல்நிலை என்பன மிக முக்கியமாக தென்சீனக் கடற்பரப்பின் பக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இக்கடற்பரப்பில் பிரதானமாக தமது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய நாடுகளாக சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகியவற்றுடன் ‘தென்கிழக்காசிய நேட்டே அமைப்பு” எனக் கூறக்கூடிய ‘ஆசியான்” நாடுகளும் அந்நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் கூட்டாளியான அமெரிக்காவும் உள்ளன.

பொருளாதார ரீதியான ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளரும் நாடுகளின் கூட்டாகவே இந்த பிராந்தியத்திலே உள்ள நாடுகள் பார்க்கப்படுகிறன. இவ்வளர்ச்சியின் நிமித்தம் தேவைகளும் உள்ளன. எரிபொருள் தேவையும் அவ் எரிபொருளை பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வழங்கலை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் இக்கடற்பிராந்தியத்தை உரிமை கோருவது தொடர்பாக ஏனைய நாடுகள் எல்லாவற்றையும்விட சீனப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானதாகும். அத்துடன் பிராந்திய அமைதியின் தேவையும் சீனாவுக்கு உள்ளது. இதன் பொருட்டு அனைத்துலக நியதிகளுக்கு ஏற்ற வகையிலான கூட்டுகளும் ஒப்பந்தங்களும் உருவாகி வருகின்றன. ஆதிக்கம் செலுத்த விரும்பும் இதர வல்லரசுகளும்; முனைப்புடன் இவ்வொப்பந்தங்களைச் செய்து வருகின்றன.

கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக இக்கடற்பரப்பை சீனா தனதென உரிமை கோருகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது கடற் போக்கு வரத்தின் நலன்கருதி இக்கடற்பகுதி அரசியல் எல்லைத் தடைகள் எதுவுமற்ற சமாதானமான கடற்பாதையாக திறந்து விடப்படவேண்டும் என கூறிவருகின்றன. தனது ஆட்சிக்குட்பட்ட கடல் எல்லைக்குள் தென்சீனக் கடற்பரப்பு வருவதால் வெளிச்சக்திகள் யாவும் இக்கடற்பிராந்தியத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும். ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளோ சீனாவின் அதிகரித்த அழுத்தம் காரணமாக சீனாவுடன் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு ஒருவரது கடற்பரப்பின் மேல் இன்னொருவர் உரிமை கோரும் பிரச்சனையானது அவ்வப்போது கடற்படைகளுக்கு இடையேயான முறுகல் நிலைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

இத்தகைய ஆட்சி அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக நாடுகள், கடல்சார் அனைத்துலக விதிகளின்படி நற்பு ரீதியான பேச்சுக்கள் மூலமும் புரிந்துணர்வின் அடிப்படையிலும் தாம் உரிமை கோரும் பகுதிகளை புவியியல் நிலையத்திற்கு ஏற்ற வகையிலும் அப்பகுதிகளின் சமூக பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும் தமக்கிடையே தீர்த்துக் கொள்ள வேண்டுமென 1982-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் இதற்கென விரிவாக எழுதப்பட்ட சாசனத்தின் கடல் சார்சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறை உலகில் சீனா தனது பொருளாதார பலத்தையும் இராணுவ வலிமையையும் பயன்படுத்தி இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்க முனைவதாக பிலிப்பையின், வியட்னாம், தாய்வான் மற்றும் புறூனை போன்ற ‘ஆசியான்’ அங்கத்துவ நாடுகள் கூறிவருகின்றன. அரிய கடல் வளம் நிறைந்த இப்பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை ரோந்து விடுவதன் மூலம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயல்கிறது.

சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுக்கும் இந்தியா

நடைபெறும் அனைத்துச் சம்பவங்களையும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை இந்திய அரசு செய்கிறது. கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில், வியட்னாம் துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ்., ஐராவத்” என்ற கப்பல், நட்பு ரீதியில் பயணம் மேற்கொண்டது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி, வியட்னாமின் “நாட்ராங்” துறைமுகத்தில் இருந்து “ஹை போங்” துறைமுகத்திற்கு “ஐராவத்” சென்றது. அப்போது வழியில், அடையாளம் தெரியாத சீனப் போர்க் கப்பல் ஒன்று, “ஐராவத்தை” வழி மறித்ததாக, “பைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், “ஐராவத்” வியட்னாமுக்கு வந்ததை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டதாகவும், நடந்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அந்த அமைச்சகம் கூறியதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது: “சீனப் போர்க் கப்பல் இந்தியக் கப்பலை இடைமறிக்கவில்லை. சம்பவம் நடந்த 22-ஆம் தேதி, தென் சீனக் கடலில், வியட்னாம் துறைமுகத்தில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தபோது, “நீங்கள் சீனக் கடல் எல்லைக்குள் வந்து விட்டீர்கள்” என ஒரு சீனக் கடற்படையிடம் இருந்து ரேடியோ தொடர்பு வந்தது. ஆனால், இந்தியக் கப்பல் அருகிலோ அல்லது சற்று தொலைவிலோ எந்த ஒரு கப்பலும் காணக் கிடைக்கவில்லை. எனினும், தென் சீனக் கடல் உள்ளிட்ட சர்வதேசக் கடற்பகுதிகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்டப்படி, பிற நாட்டுக் கப்பல்கள் வந்து செல்வதற்கான சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.”

செஷெல்ஸில் அமைக்கப்படும் சீனாவின் கடற்படைத் தளத்தைப் பற்றிய செய்தியை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது, இதனை இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதிலிருந்து இந்தியாவின் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு என்னவென்பதை அறியக்கூடியதாக உள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் கால் பதிக்கும் சீனாவை சமாளிக்க முடியாத இந்திய நடுவன் அரசு, இந்தியக் கப்பலை தென் சீனக் கடற்பரப்பில் வைத்து சீனக் கடற்படையினர் வழிமறித்ததை மூடி மறைத்துள்ளது இந்தியாவின் இராணுவ மற்றும் இராஜதந்திர வலிமையில்லாத்தனத்தேயே காட்டுகிறது.

சீனா இந்து சமுத்திரப் பகுதியில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இந்திய உபகண்டத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று சிறிலங்காவின் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரிய இந்தியாவில் வைத்து சமீபத்தில் தெரிவித்தார். சிறிலங்காவின் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரிய இந்தியா சென்று திரும்பிய ஒரு சில நாட்களுக்குள்ளேயே சீன இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா சென்று சிறிலங்காவில் இராணுவப் பயிற்சிகள், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சீனாவில் உள்ள இராணுவக் கல்லூரிகளில் சிறிலங்காவின் இராணுவத்தினரை பயிற்சிகளுக்காக அதிகளவில் உள்ளீர்ப்பது குறித்து இதன்போது இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த தரை நடவடிக்கைகள் பற்றிய குறிப்பிடத்தக்க சில விபரங்களை சீனாவின் உயர்மட்ட படைஅதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்பை மேற்கொள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவம் போர் வெற்றி கொள்ளப்பட்ட முறைமை தொடர்பாக பலமுறை விளக்கமளித்திருந்த போதும், சில குறிப்பிட்ட விடயங்கள் குறித்து சீன அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளதில் இருந்து, அவை வெளிவராத இரகசியத் தகவல்களாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிறிலங்காவில் அகலக் கால் பதிக்க ரஷ்யா கூட தயாராகி விட்டது. இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பில்லை என்கிற வகையில் இருந்த ரஷ்யா கூட சிறிலங்காவில் தளம் அமைத்துள்ளது. குறித்த தளத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர் என்னவெனில், ரஷ்யா வழங்கும் ஆயுதங்களை பழுது பார்க்கும் நிலையம் என்பதே. இதிலிருந்து, ரஷ்யாவின் உளவுத்துறையினர் பல இரகசிய வேலைத்திட்டங்களை செய்ய வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள் இராணுவ ஆய்வாளர்கள். மத்திய ஆசியாவில் எவ்வாறு ரஷ்யா மற்றும் அமெரிக்க அரசுகள் காய்களை நகர்த்தினார்களோ அதைப்போன்றுதான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளிலும் காய்களை நகர்த்த தயாராகி வருகிறார்கள் உலக வல்லரசுகள்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில், இந்தியா, சீனா, அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடுகளுக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்துமளவு காரியங்களே நடைபெறும். இப்பலப் பரிச்சையில் குறித்த பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதே உண்மை. ஏற்கனவே காலநிலை மாற்றங்களினால் அப்பகுதியில் பல இயற்கை அழிவுகள் இடம்பெறுகின்றன. வல்லரசுகளின் இராணுவப் பலப் போட்டியினால் மென்மேலும் குறித்த பகுதி மாசு அடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அழிவைத் தடுக்க வேண்டுமாயின் குறித்த பகுதிகளில் இருக்கும் சிறிய நாடுகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அத்துடன், இந்தியா போன்ற நாடுகள் மெத்தனப் போக்கை விலக்கி விட்டு, சீனா போன்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அழுத்தங்களை தக்க தருணத்தில் கொடுப்பதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

முந்தைய செய்திகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஒரு சிறுவனின் பேச்சு – காணொளி இணைப்பு
அடுத்த செய்திஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!!