”நீங்கள் ஜெ-யைப் பாராட்டினாலே விமர்சனங்கள் காதை மொய்க்கத் தொடங்கிவிடுகிறதே?”
”ஸீட்டுக்காகவோ நோட்டுக்காகவோ நான் பாராட்டவில்லை. இனத்தின் நலனுக்காக தமிழக முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கை களைத்தான் நாங்கள் பாராட்டுகிறோம். தேர்தல் நேரத்திலேயே இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த தீர்மானம் இயற்றக் கோரி னோம். முதல்வராக அமர்ந்த உடனேயே அந்தத் தீர்மானத்தை இயற்றினார் ஜெயலலிதா. மூவர் உயிரைக் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது சாதாரண செயலா? முன்னாள் முதல்வரை தமிழினத் தலைவராகக் கருதி நாம் என்னென்ன நடவடிக்கைகளை எல்லாம் எதிர்பார்த்தோமோ… எதற்கும் அசையாத கருங்கல்லாக கடந்த அரசு இருந்ததோ… அதற்கு எல்லாம் இந்த ஆட்சியில் விடிவு கிடைக்கிறது. அதைப் பாராட்டுவதில் என்ன தவறு? தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கவனம்கொள்ள வேண்டும் என முழங்கியதன் மூலம், பிராந்தியப் பிரச்னையாகப் பார்க்கப்படும் இந்த விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக முன்னெடுத்திருக்கிறார் முதல்வர். இதே கருத்தை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்கிறோம். ஆனால், முதல்வரின் கருத்தாக ஒலிக்கும்போது அந்தக் கருத்து வலிமை பெறுகிறது. நல்லது நிகழ்ந்தால் நன்றி சொல்வதுதானே நம் மரபு!
‘விமர்சனம் என்பது வெறும் சொற்கள்தான். அவை நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல!’ எனச் சொன்ன தலைவர் பிரபாகரனின் வழிநடக்கும் என்னை எத்தகைய விமர்சனத்தாலும் சிதைக்க முடியாது. ‘கலைஞரின் செல்லப்பிள்ளைதான் சீமான்’ எனக் கிளப்பிவிட்ட வாய்களைக்கூட நான் இன்னும் மறக்கவில்லை. இந்த வெற்று விமர்சனங்களுக்கு எல்லாம் நான் இற்று வீழ்வேனா என்ன?”
”பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, ஆளும் அரசின் ஆதரவாளராக எண்ணி உங்களுக்கு ஏக எதிர்ப்பு கிளம்பியதாமே?”
”பரமக்குடி கொடூரத்துக்குக் காவல் துறைதான் முழுப்பொறுப்பு என முதலிலேயே அறிக்கை வெளியிட்டேன். மருத்துவமனைக்கு சென்று காயம் பட்டவர்களைப் பார்த்தேன். முடிந்த உதவிகளைச் செய்தேன். எச்சரிக்கை அறிவிப்பு, போலி குண்டுகள் மூலமாகச் சுடுதல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல், முட்டிக்கு கீழ் சுடுதல் எனப் படிப்படியான கலைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குருவி கணக்காக அப்பாவிகளை காவல் துறை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பரமக்குடிக்குச் சென்றபோது, ‘நாங்களும் தமிழர்கள்தானே அண்ணே’ எனவும், ‘நீங்க சொன்னதாலதானே இலைக்கு ஓட்டுப் போட்டோம்’ எனவும் உரிமையோடு மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர்களோடு சேர்ந்து அழ மட்டுமே என்னால் முடிந்தது. மூன்று பேரைக் காப்பாற்ற ஒருமித்த தமிழகமே போராடிய நிலையில், 6 தமிழர்களை சர்வசாதாரணமாக சுட்டுக் கொன்றது சகிக்கக்கூடிய ஒன்றா? சுட்டுக் கொல்லப்பட்டவர்களை ஓணான்களைத் தூக்கி வீசுவதுபோல் காவல் துறை வீசியது. சேனல் 4-ல் பார்த்த கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைவு இல்லாததுதானே இதுவும். ‘கடலுக்குப் போனால் சிங்களவன் சுடுகிறான். இந்தப் பக்கம் காவல் துறை சுடுகிறது என்றால், நாங்க எங்கேதான் வாழ்வது?’ எனக் கேட்கிற குரலுக்குப் பதில் உண்டா? ஐந்து மாடுகளைச் சுட்டுப் போட்டிருந்தால்கூட பற்றி எரியக்கூடியப் பிரச்னை, அப்பாவிகளின் மரணத்தில் அப்படியே அடங்கிவிட்டது. அந்த மக்களின் ஆற்றாமை மிகுந்த இந்த வடு என்றைக்கும் ஆறாது!”
”வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே மனக் கசப்பு என செய்திகள் பரவுகின்றனவே?”
”இந்த சீமான் ஆகாயத்தில் இருந்து குதித்தவன் அல்ல. அய்யா நெடுமாறன், அண்ணன்கள் வைகோ, கொளத்தூர் மணி, சுபவீ, அறிவுமதி, அய்யா வீரமணி, ராமதாசு, திருமாவளவன் என ஆக்கப் பூர்வமானவர்களைத் தொடர்ந்து வந்தவன்தான் நான். திரை உலகுக்கு வந்தபோதே செல்வபாரதி, விடுதலை, ராவணன், கவிதாபாரதி ஆகியோருடன் அண்ணன் வைகோ-வின் கூட்டங்களில் ஓடி ஓடிக் கலந்து கொண்டவன். நான் அவர் மீது கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் அவருக்கே தெரியும். அப்படி இருக்க, மனக்கசப்பு நிகழாதா என ஏங்குபவர்களுக்கு எல்லாம் என் இதயக்கூட்டைத் திறந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை!
வதந்திகளைக் கிளப்புபவர்களுக்கு வாய் மட்டும்தான் மூலதனம். அந்த வெறும் வாய்களுக்கு விடை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சிறையில் இருக்கும் முருகனை நான் மிரட்டியதாகக்கூட அவதூறு கிளப்பினார்கள். மரணத்தின் நிழலில் நிற்பவர்களை நான் என்ன சொல்லி மிரட்ட முடியும்? ‘கொன்றுவிடுவேன்’ என்றா? அண்ணன் வைகோவும் நானும் அரசியல் நிலைப்பாட்டில் பிரிந்தவர்களே தவிர, நெஞ்சத்து நிலைப்பாட்டில் ஒருமித்து நிற்பவர்கள். இருவரும் ஒருமித்து பயணிக்கக்கூடிய சூழல் இப்போது இல்லை என்பது மட்டும்தான் உண்மை. இன்னும் உடைத்துச் சொல்வதானால்… என் எதிரி யார் என்பதை நான் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருக்கிறேன். அந்த இடத்துக்கு ஆள் தேடும் வேலையை வேறு எவரும் செய்ய வேண்டாம்!” – சீற்றம் குறையாமலே விடை கொடுக்கிறார் சீமான்.
— நன்றி – ஜூனியர் விகடன்…