அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்! – சீமான்

65

‘நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ – தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், ‘என் தாயிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார். ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த முருகனும் சாந்தனும், ‘எங்கள் உடல்களை அண்ணன் சீமானிடம் ஒப்படையுங்கள்!’ என எழுதிக் கொடுத்தார்கள். மரண மேகமாகச் சூழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வுகளை, சட்டப் போராட்டமும் சட்டமன்றத் தீர்மானமும் சுக்குநூறாக நொறுக்கிவிட்ட நிலையில், சீமானுடன் ஒரு சந்திப்பு…

”நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை… சட்டமன்றத்தில் தீர்மானம்… இந்த இரட்டிப்பு வெற்றி எப்படிச் சாத்தியமானது?”

”முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்ட சாதனை இது!

தூக்குக் கயிற்றை அறுத்து எறியும் இந்த அறப் போரை முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள். 21 வருடங்களாகப் பல தளங்களிலும் கண்ணீரைச் சுமந்தவர் எங்கள் தாய் அற்புதம் அம்மாள். அவருடைய கண்ணீரில் கருவான எழுச்சி, தங்கைகள் கயல்விழி, சுஜாதா, வடிவாம்பாள் அக்கா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் பன்மடங்காக வீரியம் பூண்டது. தங்கை செங்கொடியின் மரணத்தில், ஒருமித்த எழுச்சித் தீயாக வெடித்தது. தாய் உள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் எழுச்சி வென்றது. ஒரு தாயின் கண்ணீர், இன்னொரு தாயாலேயே துடைக்கப்பட்டது. கட்சிப் பாகுபாடு பார்க்காத அத்தனை தலைவர்களும் இதற்கு பக்க பலமாக நின்றார்கள்!”

”போர்க் குணத்தோடு போராடும் வழக்கம் உடைய நீங்கள், தூக்குத் தண்டனை விவகாரத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தீர்களே?”

”தொட்டதற்கெல்லாம் சட்டையைப் பிடிக்கிற ஆள் நான் இல்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதல்வர், நிச்சயம் மூன்று பேர் தூக்கு விவகாரத்திலும் அக்கறை காட்டுவார் என உறுதியாக நம்பினோம். ஈழத்தில் போர் தீவிரமானபோது கண்ணீர் உகுத்தால்கூட கைது நடவடிக்கையைப் பாய்ச்சினார் கலைஞர். தம்பி முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுக்கத் தகித்தபோது, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இளைய சமுதாயக் கைகோப்பை ஒடுக்கினார். ஆனால், மூன்று பேர் தூக்கைத் தடுக்க, மனிதச் சங்கிலி, மத்திய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல், கவர்னர் மாளிகை முற்றுகை, தங்கை செங்கொடியின் உடலைவைத்து காஞ்சி முழுக்க ஊர்வலம் என எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதில் எதற்காவது அரசு அனுமதி மறுக்கப்பட்டதா? போராட்டங்களுக்காக யாராவது சிறையில் அடைக்கப்பட்டார்களா? அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டனவா? மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அரசாங்கத்தை எதற்காக நாங்கள் எதிர்க்க வேண்டும்? ‘ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு?’ என, தங்கபாலு, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் சொல்வதைப்போல் முதல்வரும் சொல்லி இருந்தால், நம்மால் என்ன செய்திருக்க முடியும்? அப்படி ஒரு வார்த்தை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தவிப்பும் பதற்றமுமாக நாங்கள் தத்தளித்துக்கிடந்தோம். தன் எழுச்சியான மக்கள் போராட்டம்தான் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. எவ்வித சாயமும் இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்களாகிய நாங்களே ஆச்சர்யப்பட்டோம். மக்களின் பின்னால் தலைவர்கள் அணிவகுக்கும் காலம் வந்துவிட்டது. ‘தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து…’ என்கிற வார்த்தைகளைத் தீர்மானத்தில் முதல்வர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பலிக்காத இடத்தில்தான் கொந்தளிப்பு தேவை. பக்குவம் பழகியவர்களுக்கு இது புரியும்!”

”உங்கள் மீதான வழக்குகளுக்காகப் பயந்துதான் நீங்கள் அமைதி காத்ததாகச் சொல்லப்படுகிறதே?”

”வழக்குகளுக்குப் பயந்து அல்ல; என் இலக்குகளுக்குப் பயந்து! சிறையில் என் தம்பிகளின் தவிப்பை அருகே இருந்து அறிந்தவன் நான். வேலூர் சிறைக்குள் நான் இருந்தபோது, ரஜினி என்கிற வழக்கறிஞர் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளே வந்தார். மூன்று தம்பிகளின் தூக்கு குறித்து அவர் பேசியபோது, ‘நான் செத்தால்தான், அவங்களைத் தூக்கில் போட முடியும்’ எனச் சொன்னேன். அந்த வார்த்தைகளைக் காக்க வேண்டியவனுக்கு, யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தம்பிகள் இருவர் தீக்குளித்தபோதுகூட, ‘உயிர் வேண்டாம்; உணர்வு போதும்’ என்றுதான் வலியுறுத்தினேன். வலிய போராட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்திப் பெயர் வாங்குவது பெரிது அல்ல. ஆனால், மூன்று உயிர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, அரசியல் செய்கிற ஆள் நான் இல்லை. எங்களுடைய நோக்கம் எதிர்க் கட்சி அரசியல் அல்ல; எதிர்கால அரசியல்!

சிறை ஒருபோதும் என்னைச் சிதைக்காது; செதுக்கவே செய்யும். வழக்குக்குப் பயந்தவனாக இருந்திருந்தால், மாதச் சுற்றுலா போவதுபோல் கடந்த ஆட்சியில் சிறை வலம் வந்திருப்பேனா? காலம் முழுக்கச் சிறையில் அடைத்தாலும் சிறைக் கம்பியோடு கம்பியாக இந்தத் தம்பி இருப்பானே தவிர, வாய் பொத்தி நிற்பவர்களின் வரிசையில் நிற்க மாட்டான்!”

”நீங்கள் அடுத்தடுத்து பாராட்டு மழை பொழிவதைப் பார்த்தால், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொ.ப.செ. ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?”

”போரைத் தடுக்க கடந்த ஆட்சியில் எந்த அளவுக்குப் போராடினோம் என்பது தெரிந்தால், இப்படிக் கேட்க மாட்டீர்கள். கலைஞரை நாங்கள் போராடச் சொல்லவில்லை. அவர் அமைதியாக இருந்திருந்தால், எங்களின் போராட்டங்களாலேயே ஈழப் போரைத் தடுத்திருப்போம். கூடினால் குற்றம், சீறினால் சிறை எனச் சகிக்க முடியாத அரக்கத்தனங்களை அவிழ்த்துவிட்டு, ஒருமித்த தமிழர் எழுச்சியை கலைஞர் முடக்கியதை மறக்க முடியுமா? மூவரைக் காக்க தீக்குளித்த தங்கை செங்கொடிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி உயிர்விட்ட தம்பி முத்துக்குமார் பெயரை சட்டமன்றத்தில் மொழிய கடந்த ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருந்ததா? காங்கிரஸுக்குக் கை கட்டி, வாய் பொத்தி இனத்தையே பலி கொடுத்த கலைஞர், ‘அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு’ என வியாக்கியானம் பேசுகிறார். 20 வருட இறுக்க நிலையை இந்த இரண்டு வருடங்களில் உடைத்தவர்கள் நாங்கள். கலைஞரின் துரோகங்களுக்கு ஆளாகியவர்களுக்குத்தான் இப்போதைய ஆட்சியின் மகிமை புரியும்!”

”அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஆனதே?”

”அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் திரண்டால், தமிழகத்தால் தாங்க முடியுமா? அனைத்துக் கட்சிகளும் கைகோக்கும்என்கிற நம்பிக்கை இற்றுப்போய், ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிக் களைத்துத் திரும்பிய என்னையே அந்த சாத்தியமற்ற சங்கமிப்பில் இணையச் சொல்கிறீர்களே… ஒரு சாதாரணக் கட்சியின் மாநாட்டுக்குக்கூட லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரள்கிறார்கள். ஆனால், ஈழப் போரைத் தடுக்க நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டத்தில் திரண்டவர்கள் எத்தனை பேர்? எங்கள் கட்சி தேர்தலுக் கானது அல்ல; இனத்தின் தேறுதலுக்கானது. இங்கே தமிழர்களை இணைப்பது எளிது. ஆனால், தலைவர்களை இணைப்பது கடினம். ஒன்றாக நிற்க இங்கே எல்லோரும் தயார். ஆனால், யார் முன்னால் நிற்பது என்கிற அக்கப்போருக்குப் பதில் இல்லையே?”

”மாநில அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறாரே?”

”சோனியா சொன்னால் கேட்கிற சட்டம், எங்கள் முதல்வர் சொன்னால் கேட்காதா? முறையாகத் தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்களால் எங்களைக் கொல்ல மட்டும் முடியுமா? அமெரிக்காவில்கூட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால்,தலையாட்டும் தகுதி மட்டுமே கொண்டவர்களை முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் நடைமுறை ஆகிவிட்டது. மக்களாட்சி என்கிற பெயரில் சர்வாதிகாரப் போர்வையோடு அலைகிறது இந்தியா. திட்ட அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் நிர்மாணிக்கும் சக்தியாக எங்கள் முதல்வர் சீக்கிரமே உருவெடுப்பார். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவதும் அவர்தான்!

இது தெரியாமல் தமிழக முதல்வரோடு மத்திய அரசு மோதினால், அன்றைக்குத்தான் தெரியும் தமிழர்களின் ஒருமித்த உணர்வு எத்தகையது என்று. அதுவரை அந்த சட்ட அமைச்சர் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டால் சரி!”

நன்றி – விகடன்…

முந்தைய செய்திமத்திய அமைச்சரவை விவாதித்ததா இல்லையா?” – தூக்கு விவகாரம்… புயல் கிளப்பும் ‘தடா’ சந்திரசேகர்
அடுத்த செய்திபரமக்குடி துப்பாக்கிச் சூடு – சீமான் அறிக்கை‏