மத்திய அமைச்சரவை விவாதித்ததா இல்லையா?” – தூக்கு விவகாரம்… புயல் கிளப்பும் ‘தடா’ சந்திரசேகர்

272

தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்த தூக்குத் தண்டனை விவகாரம் எட்டு வார இடைக்காலத் தடையால் சற்றே ஆசுவாசம் ஆகியிருக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் தூக்குத் தண்டனையைக் குறைக்கவேண்டி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு மீண்டும்கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள். அடுத்தகட்ட சட்ட முன்னெடுப்புகள் குறித்து வழக்கறிஞர் ‘தடா’ சந்திரசேகரிடம் பேசினோம்.

”இடைக்காலத் தடை எப்படி சாத்தியமானது?”

”மூவருக்குமான தூக்கு விவகாரத்தை கடந்த இரண்டு வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தின் இளம் வழக்கறிஞர்கள் மூன்று பேர் மூலமாக ஆராய்ந்து வருகிறோம். சீக்கிரமே முடிவு வரப்போகிறது எனத் தெரிந்து மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷண், சாந்திபூஷண், அனில் தவான், ராஜீவ் தவான், காலின் கான்சிவேல்ஸ், மும்பை மோகித் சௌத்ரி, அந்தி அர்ஜுனா எனப் பலரிடமும் கலந்து ஆலோசித்தோம். பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் இருவரும் இதில் ஆஜராக ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணா ஹஜாரேவின் போராட்டம் தீவிரமாகிவிட்டது. அதனால், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மோகித் சௌத்ரி ஆகியோர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களின் அற்புதமான வாதம் இடைக்காலத் தடையைப் பெற்றுக் கொடுத்தது. எட்டு வாரத் தடை என்பது தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்டது அல்ல. எங்கள் வழக்கில் மத்திய மாநில அரசுகள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிப்பதற்கான அவகாசம்தான் இது!”

”மத்திய அரசு தூக்குத் தண்டனையை வலியுறுத்தி வாதாடினால், என்ன ஆகும்?”

”இத்தனை வருடங்களாக உளைச்சலில் தவிக்கும் மூன்று பேருக்கும் நீதிமன்றத் துக்கும் இடையேயான இந்த விவகாரத் தில் மத்திய அரசு எதையும் நிர்ப்பந்திக்க முடியாது. வழக்கு குறித்த உதவிகளை மட்டுமே செய்ய முடியும். அதேநேரம் 20 வருடங்கள் தனிமைச் சிறை, கருணை மனு முடிவுக்காக 11 வருடத் தாமதம் என நம் தரப்பில் வலுவான வாதங்களை வைக்க முடியும். சுனில் பத்ரா வழக்கில் தனிமைச் சிறையை அனுபவித்ததற்காகவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருமே மிக இளம் வயதில் சிறையில் சிக்கி, வாழ்வின் பெரும்பகுதியை தனிமைச் சிறையில் கழித்தவர்கள். அதனால், அவர்கள் சுமக்கும் கொடூர வேதனைக்கு நீதிமன்றம் நிச்சயம் விடிவு கொடுக்கும்!”

”முன்னாள் பிரதமரைக் கொலை செய்தவர்களுக்கு தண்டனைக் குறைப்பு நியாயம்தானா என்று காங்கிரஸ்காரர்கள் கேட்கிறார்களே?”

”தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய முடியுமா என ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஆராய்ந்தது. அதில், குற்றத்தின் தன்மைக்குள் ஒருபோதும் போக முடியாது என்பதை அப்பட்டமாகச் சொல்லி விட்டார்கள். அதனால், தூக்குத் தண்டனைக்கு ஆளானவர்களின் நியாயத்தை இனி நாம் பேச முடியாது. ஆனால், ‘ஒவ்வொரு நாளையும் சாவின் விளிம்பில் கழித்தவர்கள் நிச்சயம் மனிதத் தன்மையை இழந்திருப்பார்கள். வெறும் காய்கறிக்குச் சமமானவர்களாகவே அவர்களைக் கருத முடியும். காய்கறிகளை வெட்டுவதால் எந்தப் பலனும் இல்லை!’ என தூக்குத் தண்டனைக் கைதிகளின் மனநிலைத் தவிப்பை அப்பட்டமாக அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதனால் சிறையில் தவிப்பவர்கள் தங்களின் மன வேதனையை நீதிமன்றத்திடம் சொல்ல வழி இருக்கிறது. கொலையானவர் ராஜீவ் என்பதால் அதற்கென தனி சட்டம் எல்லாம் கிடையாது. யாராக இருந்தாலும் ‘ஓர் உயிர்’ என்று தான் கருதப்படும்!”

”குடியரசுத் தலைவரால் கருணை மனு மீண்டும் நிராகரிக்கப் பட்டால்?”

”பேரறிவாளனுக்கு அவருடைய தாய் அற்புதம் அம்மாளும், முருகனுக்கு சீமானும், சாந்தனுக்கு நானும் காப்பாளர்களாக இருந்து கடந்த 29-ம் தேதியே ஜனாதி பதிக்கு இமெயில் மூலம் கருணை மனு அனுப்பினோம். அது குறித்து அவர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால், இதற்கு முன்னர் மூன்று பேரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்தது எப்படி? என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். மத்திய அமைச்சரவை கூடி ஒருமனதாக முடிவு எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் தான், கருணை மனுக்களை அவர் நிராகரிக்க முடியும். ஆனால், மத்திய அமைச்சரவையில் அப்படி ஒரு கூட்டம் நடந்ததாகவே தகவல் இல்லை. கருணை மனு நிராகரிப்பில் எத்தகைய கலந்தாய்வுகள் நடத்தப்பட்டது என்பது குறித்து சென்ட்ரல் இன்ஃபர்மேஷன் கமிஷனரிடத்தில் நாங்கள் முறையிட்டு இருக்கிறோம். அதற்கான பதில் இப்போதுவரை வரவில்லை. ஒருவேளை அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றதாகச் சொன் னால், அன்றைய கூட்டத்தில் தி.மு.க-வைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் இருந்தார்களா என்பதும் தெரிந்தாக வேண்டும்.

தமிழக கவர்னராக பாத்திமா பீவி இருந்த போது மூன்று பேரின் கருணை மனு நிரா கரிக்கப்பட்டது. அமைச்சரவையின் ஆலோசனை இன்றி, பாத்திமா பீவி முடிவு எடுத்தது தெரிந்து வழக்கு போடப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் ‘அமைச்சரவை ஆலோ சனை பெற்ற பிறகே கவர்னர் முடிவு எடுக்க முடியும்’ எனச் சொன்னார். அதுவரை தூக்குத் தண்டனைக்கு எதிராகப் பேசிவந்த கலைஞர், உடனே அமைச்சரவையைக் கூட்டி மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை வழங்க பாத்திமா பீவிக்கு தீர்மானம் அனுப்பினார். அன்றைக்கு பாத்திமா பீவி தன்னிச்சையாக எடுத்த முடிவைத்தான் இன்றைக்கு பிரதிபா பாட்டீல் எடுத்திருக்கிறார். கருணை மனு விஷயத்தில் அவரை நிர்ப்பந்தித்த சக்திகளை அவர் அடையாளம் காட்டுவாரா?”

– இரா.சரவணன்

முந்தைய செய்திஎன் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் – நெகிழ வைத்த அய்யா மணிவண்ணன்.
அடுத்த செய்திஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்! – சீமான்