நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான்

44

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே அவர்களின் வாழ்க்கைக்கு முடிவு நிர்ணயிக்கப்பட்டது என்று கருதவேண்டியதில்லை.

இந்த மூவரும் 2000வது ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தார்கள். அதனை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்த பிறகு,ப.சிதம்பரம் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இந்த 11 ஆண்டுகளும் அவர்கள் மரண தண்டனையை  உண்டா, இல்லையா என்ற மன வேதனையிலேயே கழித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரும் அதே மன வேதனையில்தான் இருந்திருக்கிறார்கள்.

இப்போது இந்த மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளார்கள். தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் தாமதித்து நிராகரித்திருப்பது அரசமைப்பு சட்ட ரீதியாக நியாயமற்றது என்று கூறி அவர்கள் வழக்குத் தொடரவுள்ளனர். அவர்களது சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ராம் ஜெத்மலானி,காலின் கான்சிலேவ்ஸ்,யுக் மொகித் சவுத்ரி ஆகியோர் ஆஜராக உள்ளனர்.அதுமட்டுமின்றி, குற்றச்செயல் முடிந்த நாள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் மனுவில் தெரிவித்து, 20 ஆண்டுக்கால சிறைவாசத்திற்குப் பிறகு, இப்போது மரண தண்டனையையும் நிறைவேற்றினால், அது ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டிக்கப்படுவதாகும் என்றும், அது சட்டப்படி நியாயமற்றது என்றும் தங்கள் மனுவில் தெரிவிக்கவுள்ளார்கள்.

இப்படி கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் வைத்து நிராகரித்த மரண தண்டனை குற்றவாளிகள் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில், அவர்களின் தண்டனையைக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க இரண்டு தீர்ப்புகள், இவர்களின் வழக்கோடு தொடர்புடையவையாகும் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தயா சிங் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருந்த இவர் தனது மரண தண்டனையை குறைக்குமாறு கோரி ஆளுநருக்கும், பிறகு குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தார். ஆனால் அவை யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 1991ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கருத்தில்கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

இதேபோல், திரிவேணி பென் – எதிர் – குஜராத் அரசு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமற்றதா என்பதையும், அவ்வாறு கால தாமதம் ஆனதற்கு எந்த விதத்திலாவது குற்றவாளி பொறுப்பாளரா என்பதையும் மட்டுமே சீர்தூக்கிப்பார்த்து தீர்ப்பளிக்கும் என்று கூறியுள்ளது. (2)

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களிடையே நன்கு அறிமுகமான விஷ ஊசி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் வழக்கில் (1983), மரண தண்டனை விதிக்கப்ட்டு 8 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாததால், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

மேற்கண்ட வழக்குகள் அனைத்திலும் காட்டிலும், இந்த மூவர் 11 வருடங்கள், 4 மாதங்கள் கருணை மனு முடிவிற்காக காத்திருந்துள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் மிக மிக காலத் தாமதாக அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடைய மரண தண்டனை,ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது  என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆகவே விரைவில் மூவரும் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வழக்குகளில் நமக்கு உரிய நீதி கிடைக்கும். நமது குரலுக்கு உரிய நியாயம் கிட்டும்.நாம் சோர்ந்து போகவோ,துவண்டுவிடவோ தேவையில்லை.

முந்தைய செய்திமரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்
அடுத்த செய்திஅன்பு தமிழ் உறவுகளே…அவசரவேண்டுகோள்…