தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்

156

இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடியின் தியாகம் பெரும் மன வேதனையைத் தருகிறது.

அவருக்கு எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழினத்தின் மீ்ட்சிக்காக நடந்த பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரான தோழர் செங்கொடியின் உயிர் தியாகம், மூன்று பேரின் கருணை மனு நிராகரிப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம், ஆற்றாமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும். எப்படியாவது மூன்று பேரின் உயிரையும் காப்பாற்றிட வேண்டும் என்ற உறுதியான மன வேகத்தில் தன் உடலைத் தீக்கு இரையாக்கிவிட்டார் தோழர் செங்கொடி. அவருடைய இந்தத் தியாகம், மரண தண்டனை நிச்சயப்படுத்தப்பட்டுள்ள மூவரின் உயிரை எப்பாடுபட்டாவது காப்பாற்றிட வேண்டும் என்கிற தமிழினத்தின் வேட்கையை பறைசாற்றுகிறது.

ஆயினும், மூவரின் உயிரைக் காக்க தமிழினம் தீவிரமாகப் போராடிவரும் வேளையில் – அதற்கான சட்ட ரீதியான போராட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில் – செங்கொடி உயிர் துறந்திருப்பது வேதனையைத் தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப் படுகொலைப் போரை நிறுத்துமாறு கோரி முத்துக்குமார் தொடங்கி 18 பேர் தீக்குளித்து உயிர் நீத்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவர்களின் உயிரைத் தியாகத்தை கிச்சித்தும் மதிக்கவில்லை. இதயமற்ற காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் நீடிக்கும் காலம் வரை மனித உயிருக்கு மதிப்பளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது தவறு.

மனிதனின் உயிர் விலைமதிப்பற்றது, அதனை தண்டனை என்ற பெயரால் கூட சட்டம் பறித்துவிடக் கூடாது என்றுதான் நாம் போராடி வருகிறோம். அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்.

இன்று தொடங்கும் சட்ட ரீதியான நமது போராட்டம் வெற்றி பெறும், அதன் மூலம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டன குறைக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுமட்டுமின்றி, மக்களின் எழுச்சி மரண தண்டனைக்கு எதிராக வலிமை பெற்று வருகிறது. எனவே, இதற்கு மேலும் எவரொருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.