மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும்: தமிழக பேரவையில் ஒருமனதாக தீர்மானம்!

27

மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

மூவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை கொண்டு வந்து கூறுகையில், “இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 72-ன்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து குடியரசு தலைவர் நிராகரித்த சூழ்நிலை குறித்தும் இந்த விஷயத்தில் தமிழக முதல்வரான எனக்கு உள்ள அதிகாரம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் விளக்கமாக அறிவித்தேன்.

மூவரின் கருணை மனுவை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு இதில் நடவடிக்கை  எடுகக முடியாது என்றும் கூறி இருந்தேன். இந்த விஷயத்தில் மீண்டும் குடியரசு தலைவர்தான் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினேன்.

மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையால் தமிழக மக்கள் இடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் வருத்தம் அடைந்தது பற்றியும் எனது கவனத்துக்கு வந்தது.
பல்வேறு அரசியல் கட்சியினரும் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தை  ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் முதல்வர் ஜெயலலிதா.

ஒருமனதாக நிறைவேறியது…

இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டு மூலம், இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை அண்மையில் ஜனாதிபதி நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, அம்மூவருக்கும் செப்டம்பர் 9-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் மத்திய சிறை தேதி குறித்தது.

இதன் தொடர்ச்சியா, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்வர் என்ற முறையில் தனக்கு இல்லை என்று ஜெயலலிதா திங்கட்கிழமை பேரவையில் விளக்கம் அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா கைவிட்டுவிட்டதாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய தமிழக முதல்வருக்கு நன்றி.. “

முந்தைய செய்திதோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்
அடுத்த செய்திமூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்!