தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: தமிழக முதல்வருக்கு நன்றி

29
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது மனிதாபிமானமற்ற, ஆணவ பேச்சாகும்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வி்ற்கு மதிப்பளித்தும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் விடுத்த கோரிக்கையை ஏற்றும், தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாட்டின் முதலவர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் இரக்க மனத்துடன் முன்மொழிந்த தீர்மானம், சட்டப் பேரவையில் உள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது. இதற்காக உலகத் தமிழினம் மகிழ்ச்சியுடன் தமிழக முதல்வரை மனதார பாராட்டி, நன்றி கூறிக்கொள்ளும் இந்த வேளையில், அமைச்சர் சல்மான் குர்ஷித்தில் பேச்சு அப்பட்டமான அடிமட்ட அரசியல் என்பது மட்டுமின்றி, அது இந்தியாவின் இறையாண்மைகும், ஒற்றுமை உணர்விற்கும் வேட்டு வைப்பதாக உள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் போராடி பெற்றதே இந்தியாவின் விடுதலையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், அந்த தேச பக்த ஒற்றுமை உணர்வுடன் ஒருபோதும் செயல்ப்பட்டதில்லை. பதவியைப் பிடிக்க எந்த வழியையும் கையாளும் காங்கிரஸ் கட்சி, பதவியில் இருக்கும்போது அதனைக் காப்பாற்றிக் கொள்ள தலைமையை குளிர வைக்க அவ்வப்போது இப்படியெல்லாம் பேசி, நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கின்றனர்.
இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டில் வாழும் ஏழேகால் கோடி மக்களின் ஆட்சி தமிழக அரசு. அந்த அரசின் முதல்வர், தமிழக சட்டப் பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறார் என்றால், அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இது சட்டம் சார்ந்த விடயமல்ல,அதனை அறியாதவரும் அல்ல.தமிழக முதல்வர். அதனைத்தான் திங்கட்கிழமை பேரவையில் அவர் அளித்த விளக்க அறிக்கையாகும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆழமாக புரிந்துகொண்டவராக இருந்ததால் தான், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார். அதன் விளைவுதான் தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் அழுத்தம் அளிக்க வழிவகுத்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை எப்படி மத்திய அரசு உதாசீனப்படுத்தியதோ, அதுபோலவே,“அது எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது” என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாகும். தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்திற்கு பேரவையில் இருந்த 5 காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பதை சல்மான் குர்ஷித் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அந்தத் தீர்மானத்தை அர்த்தம் நிறைந்ததாக உணர்ந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டியவர் குடியரசுத் தலைவர்தான். குடியரசுத் தலைவர் முடிவை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவரா சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்? இந்திய நாட்டின் மிகப் பெரும் அங்கமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுப்பதும், மனிதாபிமானமற்று அதனை அவமரியாதை செய்வதும் இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைத்துவிடாதா?
தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மண்ணெண்ணை கொடுப்பதைக் கூட சகித்துக்கொள்ளாமல், உரிய அளவிற்கு கொடுக்காமல் மறுத்துவரும் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவரிடம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கே இருக்கப்போகிறது? தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியினரின் இப்படிப்பட்ட அவமதிப்பை நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டிலேயே நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட தராமல் தோற்கடித்து விரட்ட தயாராக வேண்டும்.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழினத்தின் நலனில் அக்கறைக் கொண்டு, தன்னால் முடிந்த அனைத்தையும் நிறைவேற்றிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.