பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

300

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் வரிப்பணமாகப் பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தவறான பொருளாதாரக்கொள்கைகளாலும், பிழையானப்பொருளாதார முடிவுகளாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்குத் தாராளமாக வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகச் சீர்குலைத்துவிட்டு, இப்போது அதனைச் சமப்படுத்த பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குவிட்டு வருவாய் ஈட்ட எண்ணுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாட்டில் நிலவும் அதிகப்படியான பொருளாதார முடக்கத்தினால் விளைந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline ) எனும் பெயரில் நாட்டின் உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுப்பது, வீட்டை கொளுத்தி வெளிச்சத்தைத் தேடும் மூடத்தனத்திற்கு ஒப்பானதாகும். நாட்டின் பொருளாதாரப் பெருவாழ்வு குறித்தான அக்கறையோ, தொலைநோக்குப்பார்வையோ அற்று, தனியார் பெருமுதலாளிகள் வசம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைத் தான்தோன்றித்தனமாகக் கையளிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கானது இந்தியாவின் எதிர்காலத்தைப் புதைகுழியில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

மத்தியில் ஆண்ட காங்கிரசு, பாஜக எனும் இரு வேறு கட்சிகளின் அரசுகளும் பின்பற்றுகிற தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனும் மிகத்தவறான பொருளாதாரக்கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் தனிப்பெரு முதலாளிகளின் கையடக்கத்திற்குள் சென்று, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பைச்சந்தித்து, கூட்டிணைவு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றன. இதனால் ,உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் தன்னியல்புக்கு வளங்களைச் சுரண்டி, இலாபம் ஈட்டும் பெரும் சந்தையாக இந்நாடு மாறிப்போய்விட்டது. விளைவாக, மண்ணின் வளங்களையும், மக்களின் நலத்தையும் சுரண்டி, பெருமுதலாளிகள் பொருளீட்ட வழிவகைச் செய்யும் இடைத்தரகர்களாக மாறி நிற்கிறது காலங்காலமாக மத்தியில் ஆளக்கூடிய அரசுகள். இதனால், இந்திய நாடானது அந்நியப் பெருமுதலாளிகளின் இலாபவெறிக்கான வேட்டைக்காடாக மாறிவிட்டது.

இத்தகைய நிலையில், கடந்த 7 ஆண்டு கால பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை ஆகிய தவறான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்நோக்கிச்சென்றது. சுதந்திர இந்தியாவில் சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியையும், நிதிப்பற்றாக்குறையையும் எதிர்நோக்க நேரிட்டது. இதன்விளைவாக, பல கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய், பல இலட்சணக்கான தொழில்கள் நலிவுற்று, சிறு குறுந்தொழில்கள் தங்களது இயக்கத்தை நிறுத்தி, இந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வகையில் வீழ்ந்து, நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. போர்க்காலங்களில்கூடப் பயன்படுத்தப்படாத இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு இலட்சம் கோடி சேமிப்புக் கையிருப்பையும் எடுக்குமளவுக்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது மோடி தலைமையிலான கையாலாகாத பாஜக அரசு.

‘சுதந்திர இந்தியாவின் கோயில்கள்’ என முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை அவற்றின் வருமான இழப்பைக் காரணமாகக் காட்டி, தனியாரிடம் தள்ளிவிடும் பாஜக அரசின் முன்முடிவு மிகமோசமான நிர்வாகச்செயல்பாடாகும். அரசின் நிர்வாகத்திறமையின்மையையும், அதிகார வர்க்கத்தினரிடம் நிலவும் முறைகேடுகளையும் நேரடியாக ஒப்புக்கொள்ள மறுக்கும் பாஜக அரசு, தங்களது நிர்வாகத்தோல்வியை மறைக்கவே பொதுத்துறை நிறுவனங்களைக் குத்தகைக்கு விடும் படுபாதக முடிவை எடுத்திருக்கிறது என்பது வெளிப்படையானதாகும். இழப்பைச் சந்தித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்செய்து, நிர்வாகத்தவறுகளைச் சரிசெய்து, இலாபத்தில் இயங்கவைப்பதுதான் நிர்வாகத்திறமை கொண்ட ஒரு நல்ல அரசுக்குக்கான இலக்கணமாகும். ஆனால், அதற்கான எந்தவொரு முன்முயற்சியும் செய்யாமல், இழப்புகளையே காரணமாகக் காட்டி, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குக் கொடுப்பதென்பது இந்திய நாட்டையே முதலாளிகளின் வசம் ஒப்படைப்பதாகும். ஏற்கனவே, எரிபொருள், இராணுவத்தளவாடங்கள், விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், தொடர்வண்டிகள், அணு ஆற்றல் என நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்வசமாக்கிவிட்ட நிலையில், தற்போது உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களையும் தனியாருக்குக் கொடுத்து இந்நாட்டின் சீரழிவுக்கு முழுமையாக வழிவகுக்கிறது பாஜக அரசு. ஏறத்தாழ 6 இலட்சம் கோடி ரூபாயைத் திரட்டும் நோக்கமாகக் கொண்டது எனக்கூறி பாஜக அரசு பெருமிதம் கொண்டாலும், இது முழுக்க முழுக்க நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் தற்கொலை முடிவாகும்.

அந்தவகையில், தற்போது தொடர்வண்டித்துறைக்குச் சொந்தமான நிலையங்கள், வழித்தடங்கள், வாரியங்கள், அரங்கங்கள், குடியிருப்புகள், சேமிப்புக்கிடங்குகள், பயணிகள் தொடர்வண்டிகள் மற்றும் நீலகிரி மலை தொடர்வண்டி உள்ளிட்ட 4 மலை தொடர்வண்டிகளையும் தனியார் வசம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் தனக்கிருக்கும் பங்குகளை விற்பதோடு, திருச்சி, மதுரை , கோவை, சென்னை உள்ளிட்ட வானூர்தி நிலையங்களையும் தனியாருக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் 9 மிகப்பெரிய துறைமுகங்களையும், அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக்கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின்பாதைகள், குழாய் பாதைகள், இந்திய உணவுக்கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக்கிடங்குகளையும், நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள விளையாட்டு அரங்கங்களையும், நிலங்கள், நட்சத்திர உணவகங்கள், டெல்லியிலுள்ள குடியிருப்புகள் என ஒன்றுவிடாமல் அத்தனையையும் குத்தகை என்ற பெயரில் மெல்ல மெல்லத் தனியார்வசம் ஒப்படைப்பதென்பது, எதிர்காலத்தில் அவற்றை மொத்தமாகத் தனியார்வயப்படுத்துவதற்கான முன்னெடுப்பேயாகும். ஏற்கனவே, மண்ணின் மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலாபத்தில் இயங்கிவரும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை முற்று முழுதாகத் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, தற்போது மிச்சமீதம் உள்ள அரசுத்துறைகளையும் தனியாருக்கு விற்பது, நாட்டினைக் கூறுபோட்டு விற்கும் கொடுஞ்செயலன்றி வேறில்லை.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இழப்பில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்வசம் சென்ற பிறகு இலாபகரமாக இயங்குவது எப்படி எனும் அடிப்படைக்கேள்விக்கு யாரிடத்தில் பதிலுண்டு? எப்போதும் நாட்டின் மீது பெரும் பக்தி கொண்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் வலதுசாரி சிந்தனையாளர்கள், நாட்டிற்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அளிப்பது குறித்து வாய்திறக்காது மௌனித்திருப்பது ஏன்? கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலம் வியாபாரம் செய்ய வந்து நாட்டைக் கைப்பற்றிய பிரித்தானியர்களிடமிருந்து சிறைப்பட்டு, செக்கிழுத்து, இரத்தம் சிந்தி, தூக்கில்தொங்கி, குண்டடிப்பட்டுப் பெறப்பட்ட விடுதலை திருநாட்டை, சிவப்புக்கம்பளம் விரித்து அந்நியப் பெருமுதலாளிகளுக்கு விற்பதென்பது, சுதேசி இயக்கம் கண்டு வெள்ளையரிடம் உயிரையே விலையாகக் கொடுத்த நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். ஒற்றைமயமாக்குகிறோம் எனும் பெயரில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் அதிகாரங்களைத் தனதாக்கி, தேசிய இனங்களின் பிறப்புரிமையான மாநிலத்தன்னாட்சியை அழித்தொழித்த ஒன்றிய அரசு, தற்போது அவற்றைச் சரிவர நிர்வகிக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தி, பின், அதனையே காரணம்காட்டி தனியாருக்குக் கொடுப்பது கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வன்செயலாகும்.

ஆகவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இந்நாட்டின் இறையாண்மையையும் முற்றுமுழுதாகத் தனிப்பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களிடமும் அடகு வைக்கக்கூடியப் பேராபத்தாகும். இதனை உடனடியாகக் கைவிட வேண்டுமென ஒன்றியத்தை ஆண்டு வரும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்தும்பட்சத்தில், இந்திய நாடு மீண்டும் காலனி நாடாக மாறும் அபாயம் ஏற்படுமென எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொருளாளர் மாற்றம்
அடுத்த செய்திஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக 17.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்