அறிக்கை-நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது டக்ளஸ் அனுப்பிய கூலிப்படைகள்- சீமான்

31

நாகை மாவட்டம், அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், 19ஆம் தேதி இந்தியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் சுற்றி வளைத்து, கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, அவர்களின் வலைகளை அறுத்துள்ளனர், பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர். நமது மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜிபிஎஸ் கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

கடலின் எப்பகுதியில் தாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொண்டு மீன் பிடிக்கவே ஜிபிஎஸ் கருவி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி, இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த அக்கரைப்பட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரிய செயல் மட்டுமின்றி, அத்துமீறி நடத்தப்பட்ட திட்டமிட்டத் தாக்குதல் என்பதும் கவனிக்கத்தக்கது.


இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல, இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒருபோதும், தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. இது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப் படகைக்கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்னார் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என்பதே. இதைத்தவிர, இரு நாட்டு மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

மாறாக, நேற்று முன் தினம் நடத்தப்பட்டுள்ளத் தாக்குதல், சிறிலங்க அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. கெய்ட்ஸ் தீவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற சிறிலங்க அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை.

முன்பு ஒரு முறை யாழ்ப்பாணக் கடலில் தமிழ்நாட்டின் இழுவைப் படகுகளில் (Trawlers) தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, யாழ்ப்பாண மீனவர்கள் படகில் வந்து இழுவைப் படகுகளை சுற்றி வளைத்து அவர்களை கரைக்கு கொண்டு சென்று சிறிலங்க காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பல நாட்களுக்குப் பின் திரும்பி வந்த அந்த மீனவர்கள், இலங்கையில் தாங்கள் நன்றாக நடத்தப்பட்டதாகக் கூறினர். அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த வட இலங்கை கடல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நவரத்தினம், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது அல்ல பிரச்சனை, அவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம் என்று கூறினார். இது எல்லா நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது.

ஆக, ஒருபோதும் இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இல்லை, நடத்தவும் மாட்டார்கள். ஆனால் திட்டமிட்டு இப்பொழுது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனைகளில் தமிழக முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீ்ர்மானத்தை கடுமையாக விமர்சித்த சிறிலங்க பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை மீனவர்கள்தான் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர், அவர்களை ஜெயலலிதா முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று தவறான கூற்றினைக்கூறி பிரச்சினையை திசை திருப்பினார். தற்பொழுது கோத்தபய கூற்று உண்மையென்று நம்பவைக்க மக்களை மடையர்கள் என்று எண்ணி இப்படியொரு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது அப்பட்டமான டக்ளஸ் வேலையாகும்.

எனவே, இத்தாக்குதல் குறித்தும் இதனை நடத்தியவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக அணுக வேண்டுமென்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும். இதை செய்யத் தவறினால், கூலிப்படைகளின் இப்படிப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரும் அபாயம் உண்டு என்பதையும் நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.
முந்தைய செய்திநான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?
அடுத்த செய்திதூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்