ராஜபக்சே தேர்தல் பரப்புரையில் பாடும் பாடகர்களுக்கு அனுப்பிய கடிதம் – நாம் தமிழர் அமெரிக்கா

23

மதிப்பிற்குரிய பாடகர்கள் மனோ, கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு,

தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் மரியாதையுடனும், செல்வ செழிப்புடனும் வலம் வருகிறீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் நாடுகளுக்கு உங்களை அழைத்து உங்கள் பாடல்களை விருப்பத்துடன் கேட்டு மகிழ்கிறார்கள். இப்படி உங்களை உயர்ந்த இடத்தில வைக்கும் தமிழர்களின் விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் மாறாக நடக்கிறீர்கள் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு ராஜபக்சே தலைமையில் இருக்கும் சிங்கள இனவெறி அரசால் நடந்தேறியது.  தமிழர்களுக்கு எதிரானப் போரில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.  ஐநா மன்றம் நியமித்த நிபுணர் குழு விசாரண அறிக்கை ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசின் அட்டூழியங்களை எடுத்து கூறி  உடனடியாக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஐநா மன்றத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு அனைத்து கட்சி ஆதரவுடன் ராஜபக்சே தலைமையிலான அரச படை போர்குற்றம் செய்துள்ளது என்றும் போற்குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இங்கிலாந்து தொலைக்காட்சி சானல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது அதில் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரச படை, போரின் கடைசி நாட்களில் எத்தனை மனிதாபிமானமற்ற முறையில் நடந்தது என்று காட்சிகளாகவே காட்டியது அது உலக மக்கள் பலரின் மனசாட்சியை தட்டி எழுப்பி, பலரும் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை கண்டித்துள்ளார்கள். இப்படிப்பட்ட ராஜபக்சே தலைமையிலான இனப்படுகொலை செய்த அரசுக்கு ஆதரவாகத்தான் அதே தமிழர் பகுதிகளில் நடக்கும் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரையில் ஒரு பகுதியாக உங்கள் நிகழ்ச்சியை நடத்த சென்றுள்ளீர்கள்.  இந்த தேர்தலில் பல நேர்மையற்ற செயல்கள் பல செய்து வெல்வதன் மூலம் தமிழர்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று உலக நாடுகளுக்கு  சொல்லி போர்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்து தமிழர்களுக்கான நியாயம் கிடைக்காமல் வழி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டம் தீட்டி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக உங்களது திறமைகளை வைத்து ஓட்டு சேகரிப்பு நாடகம் நடத்த இருக்கிறார்கள்.

இதெல்லாம் தெரிந்து சென்றீர்களோ தெரியாமல் சென்றீர்களோ. ஆனால் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் கொலையுண்ட சமாதியின் மேல் தான் நீங்கள் கச்சேரி செய்ய இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதில் உங்கள் பாடல்களையும் விரும்பி கேட்டவர்கள் பலர் இருக்கலாம். உங்கள் ரசிகர்கள், நலம்விரும்பிகள் பலர் இருக்கலாம். அவர்களை கொன்றவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது எத்தனை கேவலமானது என்று யோசியுங்கள், அந்த மக்களின் அநியாய மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? அதை தடுக்கும் செயல்களுக்கு நீங்கள் துணை போகலாமா?  எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு கிரிக்கெட் அணியை மனித உரிமை மீறல் நடந்த இலங்கைக்கு போக வேண்டாம், புறக்கணியுங்கள் என்று அந்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.  நீங்கள் தமிழர் பணத்தில் வளர்ந்தவர்கள் தமிழர்கள் உங்களை உயர்த்தி இருக்கிறார்கள். அந்த தமிழர்களுக்காக நீங்கள் இந்நிகழ்ச்சியை மனமுவந்து புறக்கணித்து தமிழர் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டாமா?

இலங்கை அரசின் இந்த நேர்மையற்ற வஞ்சகமான செயலுக்கு துணை போகாமல் மனிதாபிமானம் நிறைந்த நீங்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு தாழ்மையுடன் அமெரிக்க நாம் தமிழர் அமைப்பு கேட்டுக்கொள்கிறது. எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து நீங்கள் சிங்க இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல் படும்பட்சதில் உங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். அதற்கான வேலைகளை நாங்கள் முன்னின்று செய்வோம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

நாம் தமிழர் – அமெரிக்கா

சன்னிவேல், கலிபோர்னியா

முந்தைய செய்திகோவையில் 23.07.11 அன்று பொதுக்கூட்டம் மற்றும் தமிழின படுகொலை காட்சி திரையிடல் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? – குமுதம் இணையதளத்திற்காக அற்புதம் தாய் அளித்த செவ்வி