பெரும் எழுட்சியுடன் நடைபெற்ற கோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம்.

46

10.7.2011 அன்று கருநாடகம் மாநிலத்தில் கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு பேரணியும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் உணர்ச்சி வெள்ளமாய் ஒன்று திரண்டனர். உறிகம் ரயில் நிலையம் அருகிலிருந்து 3 .30 மணிக்கு தொடங்கிய பேரணி, 6 மணிக்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்த ராபர்ட்சன் பேட்டை நகரசபை மைதானத்தை அடைந்தது! பறையாட்டம், குழந்தைகளின் தமிழ் கலை நிகழ்ச்சி ஆகியவை அரங்கேறி முடிந்தபின், சரியாக 6 .30 மணிக்கு அண்ணன் சீமான் ஏற்றிய புலிக்கொடி பட்டொளி வீசி வானில் பறந்தது!

பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியூமென், புலவர் மகிபை பாவிசைக்கோ, கவிஞர் கன.குறிஞ்சி, இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், அறிவுச்செல்வன், தலைமை நிலைய பேச்சாளர் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கருநாடக மாநிலத்தை சேர்ந்த தமிழடியான் வரவேற்புரை ஆற்றினார். கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரபு நலங்கிள்ளி தலைமை வகித்தார்.முதலில் புலவர் பாவிசைக்கோ பேசும்போது, தமிழர் தம் பெருமைகளை எடுத்துரைத்து, புதிய முயற்சிகளில் இறங்கி இருக்கிற நாம்தமிழர் கட்சியின் இளைஞர்களை வாழ்த்தினார்.

அடுத்து பேசிய கவிஞர் கன.குறிஞ்சி அவர்கள் பல்வேறு தேசங்களில் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் பால் நியூமென் அவர்கள், உலக அளவில் இன்று ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை தெளிவுபட எடுத்து வைத்தார். இந்திய மத்திய அரசுதான் ராஜபக்ஷேவின் காவலனாக நின்று இலங்கையை காப்பாற்ற முனைவதாக குற்றம் சாட்டினார். தமிழர்கள் ஒன்றுபடவேண்டிய தருணம் இது என்பதை நினைவூட்டினார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய அண்ணன் சீமான் பேசுகையில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி தொடங்கினார். சாதியை மதமாய் தமிழன் பிரிந்து கிடப்பதுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணம் என்று சாடினார். ” வெடிகுண்டு போடுவது பெரிய பயங்கரவாதமில்லை தன் மக்களை பட்டினி போடுவதே மிகப்பெரும் பயங்கரவாதம், கோடிக்கணக்கான தன் சொந்த மக்களை 60 ஆண்டுகாலமாக பட்டினி போட்டு வைத்திருக்கிற இந்த நாடுதான் சர்வதேசிய பயங்கரவாதி…. இந்த நாடு தன் சொந்த நாட்டிற்காக ரத்தம் சிந்தி உயிர் கொடுத்து போராடிய எம் மக்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையானது” என்று முழங்கினார். தலையில் இருக்கும் காஷ்மீரை தாங்கிப்பிடிக்கும் இந்தியா காலில் இருப்பதாக எண்ணியா கச்சத்தீவை தூக்கிக்கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார். மண்ணைப் பொன்னாக்கிக் கொடுத்த தங்கவயல் தமிழர்களை 20 ஆண்டுகளாக மாற்று வேலையும் இல்லாமல் ஒரு சிமென்ட் அட்டை கூரைக்குள் அடக்கியது எந்தவகை நியாயம் என்று கேட்டார். தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்கிற அறைகூவலோடு தன் எழுச்சி உரையை முடித்தார். திரண்டிருந்த மக்கள் வெள்ளம் உணர்ச்சி பொங்க கலைந்த காட்சி மெய்சிலிர்க்கும்படி அமைந்திருந்தது. இக்கூட்டத்தை கோலார் தங்கவயல் நாம்தமிழர் கட்சியை சார்ந்த தமிழர்.அகஸ்டின், தமிழர்.வின்சென்ட், தமிழர்.வெற்றிசீலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஏராளமான உறவுகளும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திSEEMAN SPEECH IN KGF 10 JULY 2011
அடுத்த செய்திஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.