இலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் – நாம் தமிழர்

86

அன்பார்ந்த தமிழ் வாக்காளர்களே!

வணக்கம்!


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்னும் ஆவணப்படம் மற்றும் ஏப்ரல் இரண்டாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்களினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கமானது பன்னாட்டு அங்கீகாரத்தை பல்வேறு வழிகளில் நாடி நிற்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.  திடீரென வடக்கில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வடக்கில் இருந்து வந்த சிங்களவர்களைக் கொண்டு நிறைவேற்றி வடக்கை சிங்கள மயமாக்கும் தனது மறைமுக வேலைத்திட்டத்தை அரசாங்கம் முனைப்புடன் நிறைவேற்றி வருகிறது.  மக்களாட்சிக் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு அரசாங்கமாக தன்னை பன்னாட்டு மட்டத்தில் காட்டிக் கொள்வதற்காக துப்பாக்கி முனையில் தேர்தல்களை நடாத்துவதோடு நிறைவேற்றபடப்படாத வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கி வருகின்றது.

எங்களின் தமிழ் சொந்தங்களின் சுயநிர்ணய உரிமைக் கனவுகளைக் கொடூரமாகச் சிதைத்ததோடு அது ஒரு கேள்விக்குறியாகவும் தற்போது விடப்பட்டுள்ளது.  தமிழர்களின் பாதுகாப்பு இந்த அரசுக்கு எப்போதுமே முன்னுரிமையான விடயமாக இருக்கவில்லை.  பன்னாட்டு அவதானிப்பாளர்களுக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விட்டிருந்தது.  ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் இவர்களின் தமிழ் எதிர்ப்புப் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம்.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலையில் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய இயலும்?

2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 816,005 ஆக இருந்தது.  தற்போது அது 481,791 ஆக குறைக்கப்பட்டு உள்ளது  சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் 331,214 பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது.  இந்த எண்ணிக்ளை மாற்றத்துக்கான எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை.

ஆயுதப் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சிங்கள மயமாக்குதல், படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்தல், தமிழ் பண்பாட்டை அவமதித்தல், சிங்கள மொழித் திணிப்பு, அடிப்படை மனிதத் தேவைகள் மறுக்கப்படுதல், பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாகப் பேணப்படுதல் போன்ற செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்கின்றது.  அங்கு வாழும் மக்கள் அமைதியையும் நீதியையும் சட்ட ஒழுங்குகளையும் மனிதாபிமானத்தையும் வேண்டி நிற்கின்றனர்.  இந்த அரசாங்கம் இவற்றில் எதையுமே செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இவர்களிடம் இதை எதிர்பார்ப்பதும் எமக்கு பயனுள்ளதாக இருக்கப்போவதில்லை.  இந்த அரசாங்கமானது எங்களை அடிமை நிலைக்கே இட்டுச் செல்கின்றது.  இந்த நேரத்தில் மக்களாகிய நாம் இந்த அரசாங்கத்தின் கபடத்தன்மையையும் சட்ட சீர்கேட்டையும் மனிதத்துக்கு எதிரான கொடூரத்தன்மையையும் எதிர்ப்பதற்கு ஒன்றிணைந்த சக்தியாக செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது.

முதலாவதாக போர்க் குற்றம் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்த சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்துக்கு அதற்குரிய பதிலை வழங்க வேண்டும்.  அப்படி ஒரு நாள் வரும் வரை சிங்கள அடிவருடிகளாகச் செயற்படும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நாம் முற்றாகக் புறக்கணி;க்க வேண்டும்.  தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.  ஒன்றிணைந்த சக்தியாக முழு மனதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் வாக்களிக்க வேண்டிய தருணம் இது.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிறுத்தி நாம் வாக்களிப்போம்.

நாம் தமிழர்