வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்

24

சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 22 பேர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அவலூர் புறவழிச் சாலையில் அருகே நடந்த கோர விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற துயரமான விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சொகுசுப்பேருந்துகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தான நேரங்களில் பயணிகள் வெளியே தப்பிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் பேருந்துகள் வடிவமைக்கப் பட்டு இருப்பதே ஆகும். பயணிகளைக் கவருவதற்கு வசதிகளைச் செய்வதாகக் கூறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை.

பெரும்பாலான தனியார் பேருந்துகளில் அவசர காலத்தில் தப்பிக்க கதவுகள் (Emergency Door ) இருப்பதில்லை, அமருவதற்கும், தூங்குவதற்கும் இருக்கைகளை அமைத்து ஜன்னல்களின் அளவைக் குறைத்து விட்டனர், மேலும் விபத்து நடந்தாலும் வெளிய தப்பி வர முடியாத நிலை இருக்கிறது.

நேற்று நடைபெற்ற விபத்தில் கூட ஆம்னி பஸ் குளுகுளு வசதி செய்யப்பட்டு இருந்ததால் ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடியால் மூடப்பட்டு இருந்தது. இந்த கண்ணாடியை பயணிகளால் திறக்க முடியவில்லை. முன் பக்கத்தில் இருக்கும் கதவு வழியாக மட்டுமே பயணிகள் வந்து செல்ல முடியும். இதன் காரணமாக பயணிகள் யாரும் வெளியேற முடியாமல் பேருந்தின் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். இது தான் விபத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.ஆகவே அரசு தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் முலம் மட்டுமே இனி வரும் காலங்களில் இது போன்ற கோர விபத்துக்களைத் தடுக்க முடியும்.

என்று சீமான் தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.