சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமி மீது வழக்கு தொடர உள்ளோம் – வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன்

77

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

‘ஃபிரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சென்னை – சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று நேரில் புகார் மனு ஒன்றை இவர் அளித்தார்.  அதில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் விஜயலட்சுமி கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து சீமான் தரப்பு வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் கூறுகையில், “நடிகை விஜயலட்சுமியை சீமான் ஒருமுறை வழக்கு ஒன்றுக்காக என்னிடம் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் துயரங்களை கண்டு மன வேதனை அடைந்த சீமான், அதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய மத்திய – மாநில அரசுகளை கண்டித்து  சீமான் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றார். சுமார் ஓராண்டிற்கு மேலாக சிறையிலேயே அவர் காலத்தை கடத்தி உள்ளார்.

இந்த நிலையில் சீமான் காதல் கத்திரிக்காய் செய்யும் மனநிலையில் இருந்ததில்லை. விஜயலட்சுமியை சீமான் உண்மையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள மறுத்திருந்தால் முதலில் விஜயலட்சுமி என்னிடமோ, சீமானின் நல விரும்பிகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ புகார் தெரிவித்திருக்க வேண்டும்.

அதை விடுத்து போலீசாரிடம் சென்று சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சீமானுக்கு எதிராக திட்டமிட்டு யாருடைய தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்ஷேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார்.

இதனை தடுக்கும் வகையில் மத்திய உளவுத்துறையினரும், தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம்.

சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்,” என்றார் சீமானின் வழக்கறிஞர்.

நன்றி

விகடன் .காம்

முந்தைய செய்திதமிழினப்படுகொலை – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கின்றது!
அடுத்த செய்திஇன்று மதியம் 1.00 மணிக்கு ராஜ் தொலைகாட்சியில் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலை விளக்கும் சீமானின்பேட்டி