அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

24

நீதிக்கு எதிரான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை இலங்கை இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக ராஜபக்சேவுக்கு வொசிங்டன் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த அழைப்பாணை ராஜபக்சேவின் அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது.  ஆனால் அதை ஏற்க ராஜபக்சே மறுத்து விட்டதையடுத்து  நீதி அமைச்சகம் அதைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதே நேரம் இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதியமைச்சின் செயலர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.  தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நீதிமன்ற நடவடிக்கையானது ராஜபக்சேவுக்கும் அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின் படி அரச தலைமைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே ராஜபக்சவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல்“ என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியுயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஇன்று ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்
அடுத்த செய்திசட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் – – செந்தமிழன் சீமான்