ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புதுடில்லி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

30

புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புக்களும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) ஏற்பாடு செய்த “சிறீலங்காவின் போர்க்குற்றங்கள்: ஐ.நா அறிக்கையும் அதன் நடைமுறையும்” என்ற தலைப்பிலானமாநாடு கிருஸ்ணன் மேனன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதனை ஏன் இந்திய மக்களும், அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டிருந்தது.

இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் பிரிவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இரண்டாவது பிரிவில் பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த அரசியல்வாதிகள் பங்குபற்றியிருந்தனர்.

புதுடில்லி மாநாடு தொடர்பான அறிக்கையை நீதிபதி ரஜீந்தர் சசார் வெளியிட்டு வைத்திருந்தார். முதலாவது கூட்டத்தொடருக்கு உலக சீக்கியர் செய்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜெக்மோகன் சிங் தலைமை தாங்கியிருந்தார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ள ஐ.நா அறிக்கை வழி அமைத்துக் கொடுத்துள்ளதுடன், ஐ.நா அறிக்கைக்கு பின்னராவது சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவுகளை வழங்கிவந்த நாடுகள் அதனை மறுஆய்வு செய்யவேண்டும் என சிங் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் இருந்து இந்திய அரசு தப்பமுடியாது. கச்சதீவு சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டதனால் தான் பல நூறு தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நடைபெற்ற போர் தமிழ் மக்களுக்கு எதிரான போர். ஆனால் அது தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.

சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஒரு சமரை இழந்துள்ளனர். ஆனால் போரை அவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், சிறீலங்கா ஊடகங்களும் இந்து போன்ற இந்திய ஊடகங்களும் சிறீலங்கா அரசின் கருத்தை தான் கூறிவந்ததாக சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம், பட்டினிபோட்டும், பாலியல் வன்முறைகளை மேற்கொண்டும் இனஅழிப்பை மேற்கொண்டு வந்துள்ளது. இதனை தண்டிக்கத் தவறினால் உலகம் மனிதாபிமானத்தின் அர்த்தத்தை இழந்துவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1950 களில் தென்ஆசியாவில் மிகவும் சிறப்பான தேசமாக சிறீலங்கா இருந்தது, ஆனால் தற்போது அது றுவாண்டாவை போல் மாற்றமடைந்துள்ளது என ஊடகவியலாளர் சத்திய சிவராமன் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவின் போருக்கு உதவிய இந்திய அரசு, மகிந்தாவின் பொதுமக்கள் தொடர்பாக முகாமையாளர் போல செயற்பட்டுவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் சிறீலங்கா அரசே பொறுப்பு. அங்கு ஐ.நா பணியாளர்களை அனுமதிக்காததும் தவறு என புதுடில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஜீந்தர் சசார் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் குற்றங்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்து மௌனமாக இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் மணிப்பூர் அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர் மாலம் நிந்தோஜா, கர்நாடகாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் நாகாரி பாபையா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

இரண்டாவது அமர்வு சத்திய சிவராமன் தலைமையில் இடம்பெற்றபோது, அங்கு சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான காணொளிகளும் காண்பிக்கப்பட்டன. பொதுவுடமைக் கட்சியை சேர்ந்த டி ராஜா சிறீலங்கா இராணுவத்தினரின் தொடர் இனஅழிப்பு தொடர்பாக பேசியிருந்தார்.

ஐ.நாவின் அறிக்கைக்கான பொறுப்பை இந்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். போரை சிறீலங்கா அரசு நடத்தியபோதும், இந்தியா அதற்கு உடந்தையாக இருந்தது. சிறீலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முற்றாக தோல்வி கண்டுள்ளது. ஐ.நா அறிக்கைக்கான விளக்கத்தை இந்தியா தரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிபிஎல் கட்சியின் உறுப்பினர் ஸ்வப்பன் முகர்ஜி உட்பட பலர் உரையாற்றியிருந்தனர்.

இந்த மாநாட்டில் பின்வரும் ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஐ.நா செயற்படுத்த வேண்டும்.

2. தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா படையினரும், அரச அதிகாரிகளும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3. ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் இனப்படுகொலையாகவே கருதப்பட வேண்டும்.

4. சிறீலங்காவில் போர் நிறுத்தம் முறிவடைந்தபோது சிறீலங்காவின் விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொண்ட இந்தியா, அனைத்துலக விசாரணைகளுக்கு கோரிக்கை விடுப்பதன் மூலம், சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

5. எல்லா அரசியல் கட்சிகளும், ஜனநாயகத்திற்கு குரல்கொடுப்பவர்களும் சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒருமித்த கருத்தை முன்வைக்கவேண்டும்.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

முந்தைய செய்திSUMMMARY OF CONVENTION ON UN REPORT ON SRI LANKA – New Delhi
அடுத்த செய்திஇலங்கை போர்குற்ற நடவடிக்கை மேல் கட்ட நடவடிக்கை குறித்து பான்கிமூன் ஆலோசனை.