போரினால் அகதிகமாக இடம்பெயர்ந்தவர்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறீலங்கா அரசாங்கத்தின் நிவாரண முகாம்கள் இரண்டில் தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மெனிக் பார்மில் உள்ள கதிர்காமர் முகாமில் 11 ஆயிரத்து 600 பேரும், ஆனந்தகுமாரசுவாமி முகாமில் சுமார் 6 ஆயிரம் பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
போர் முடிவடைந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவந்த 2 லட்சத்து 81 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. எனினும், 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர்ந்தும் அவர்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்கின்றனர். போரினால்; பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் மேலும் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.
மோதல்களினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு போர் முடிவடைந்த பின்னர் உடனடியாக வீடுகளை சிறீலங்கா அமைத்துத் தருவதாக அரசாங்கம் கூறியது. இதற்காக இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதாகவும் ஏனையோருக்கு சிறீலங்கா அரசாங்கம் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறியிருந்தது.
எனினும், இந்தியாவினால் அமைத்துத் தருவதாகக் கூறிய ஒரு வீடு கூட இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை. அத்துடன் சிறீலங்கா அரசாங்கத்தினால் அமைத்துத் தருவதாகக் கூறிய வீட்டுத் திட்டமும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி
ஈழம் இ நியூஸ்