கனடிய தமிழர்கள் விட்டு விட்டுப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ரொறன்ரோ அமெரிக்க தூதுவராலயத்தின் முன் மாபெரும் கவன ஈர்ப்பும் பேரெழுச்சி ஒன்று கூடல் போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ( மே 06) நடத்தினார்கள். நாம் தமிழர் கனடா முன்னெடுத்த இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு, கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் தேசிய அவை, தமிழ்ப்படைப்பாளிகள் கழகம், கனடிய தமிழர் இணையம், மாணவர் அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், ஊடகங்கள், ஊர்ச்சங்கங்கள் உட்பட பல அமைப்புக்கள் இதில் கலந்து கொண்டன. பல நாற்றுக் கணக்கான மக்கள் உணர்வோடு கலந்து கொண்ட இந்தக் மாபெரும் கவன ஈர்ப்பும் பேரெழுச்சி ஒன்று கூடல் போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டது ஒரு சிறப்பாகும்.
மாறிவரும் உலக ஒழுங்கினை எம் விடுதலைக்கான படிகளாய் மாற்றுவோம்!
நீளுகின்ற நட்புக் கைகள் அனைத்தையும் நன்றியுடன் இறுகப் பற்றுவோம்!
விடியலை எட்டும்வரை விழியுறங்கான் தமிழன் எனும் திடமான உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்வோம்!
தமிழராய் ஒன்றிணைவோம்! தளை களைந்து நிமிர்ந்து எழுவோம்!
என்ற முழக்கங்கள் போராட்டத்தின் தொனிப் பொருளாக இருந்தன.
போர்க்குற்றம் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களைக் கண்டறிய ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அய்யன்னா அவை, அமெரிக்கா மற்றம் அய்ரோப்பிய ஒன்றியம் நியமிக்க வேண்டும் என்பது கவன ஈர்ப்புப் போராட்டத்தின் மையக் கோரிக்கையாக இருந்தது.
சிறிலங்கா சனாதிபதி ஒரு போர்க்குற்றவாளி! மகிந்தா இராசபக்சேயை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்! சிறிலங்கா 150,000 தமிழர்களைக் கொன்றொழித்தது! அய்யன்னா சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையைப் போடு! உருசியா, சீனா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாதே! அய்யன்னா அவைக்கு கோடி நன்றி போன்ற நூற்றுக் கணக்கான மட்டைகளையும் பதாதைகளையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூக்கிப் பிடித்த வண்ணம் நின்றார்கள். மாணவர்கள் போர்க்குற்றவாளி இராசபக்சேயை நீதிமன்றத்தில் நிறுத்து என்று ஒலிபெருக்கியில் தொடர் முழக்கம் செய்தார்கள்.
சிறிலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு பன்னாட்டு ஆணைக் குழுவை அமைக்குமாறு கேட்டு அய்க்கிய நாடுகள் அவை செயலாளர் நாயகம் பான் கி மூன், அமெரிக்க ஆட்சித்தலைவர் பரக் ஒபாம்மா, வழக்குத் தொடுநர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஆகியோருக்கு முகவரியிட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் விண்ணப்பங்களில் கையெழுத்துப் பெறப்பட்டன.
இந்தக் கவன ஈர்ப்புப் போராட்தை இங்குள்ள தமிழ் ஊடகங்கள் மட்டும் அல்லாது கனடிய மைய ஊடகங்களும் வருகை தந்து நிகழ்ச்சியை ஒலி, ஒளி பரப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் மதியம் ஒரு மணி தொடங்கி மாலை 7.00 வரை நடை பெற்றது. போராட்ட முடிவில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க சிவதாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இந்த மாதம் 18 ஆம் நாள் அய்யன்னா அவைக்கு முன்னால் நாடுகடந்த தமிழீழ அரசு நடத்தும் மாபெரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் கனடியத் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது.