தமிழக சட்டசபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

58

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 13.05.11  (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் 78.80 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதத்துக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணும் பணியில் 16,966 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருடன் 45 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களில், எந்த வேலையை யார் செய்வது? என்பது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி, கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று காலை 5 மணிக்கு இந்த தேர்வு பணி நடைபெறுகிறது.

தேர்தல் ஏஜெண்டுகள் காலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்துவிட வேண்டும். அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு, ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை கதவின் சீல், அனைவரது முன்னிலையிலும் உடைக்கப்படும்.

அதன்பின்னர், தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ள ஓட்டு எந்திரங்கள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணும் இடத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.