ஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்

126

இந்த ஆண்டு 28 -வது வணிகர் தினம்.1983 -ம் ஆண்டு நுழைவு வரியை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்திற்காக வணிகர்கள் சிறை சென்ற நாள் மே 5 . அந்த நாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் வணிகர் தினமாக கடைப்பிடித்து வருகிறார்கள். வணிகர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் உழைப்பைத் தருவார்கள்,அந்த உழைப்பினைச் சுரண்டும் வண்ணம் நாட்டை நிர்வகிக்கும் அரசே நடந்தாலும் அதனை எதிர்த்துச் சிறைச்சாலை வரை சென்று தங்கள் உரிமையைப் போராடிப் பெறவும் தயங்க மாட்டார்கள் என்பதனை நாட்டுக்கு உணர்த்திய நாள் மே 5.அந்த வெற்றியை வருடந்தோறும் மாநில மாநாடுகள் நடத்தி வலுப்படுத்தி வருகிறார்கள். அதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் எமது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். வணிகர்கள் தங்கள் பிரச்சனைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கும் தங்கள் குரலினை எழுப்பி வருகின்றார்கள். காவிரி,முல்லை பெரியாறு,ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை ஆகியவற்றிற்கு எதிராகத் தமது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு போராட்டத்தில் கலந்து கொண்டும் இருக்கிறார்கள். இது மிக முக்கியமான மாற்றம். இதனை வரவேற்கிறோம். ஆனால் அன்றைய நிலையை விட இன்று நூற்றுக்கணக்கான பிரச்சனைகள் வணிகர்களைச் சூழ்ந்திருக்கின்றன.

உலகமயமாக்கல் கொள்கைகள் விளைவாக இன்று நம் நாட்டின் வணிகம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.உள்நாட்டுத் தொழில்கள், சிறு வணிகம் முதலான துறைகளை பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கவைக்கும் வகையில் இன்று அரசுகள் திட்டமிட்டு அமலாக்கிவரும் கொள்கைகள் நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கின்றன. தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தைச் சார்ந்து லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஆனால் ஆட்சியில் யார் இருந்தாலும் இவர்களை ஒழிக்கும் வகையில் செயல்டுகின்றனர். இத் தொழிலில் தற்பொழுது பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக முதலாளிகள் நுழைந்து சிறு வணிகர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நிலையில் மிகப்பெரிய நெருக்கடியை அரசு இவர்களுக்கு அளிக்கிறது. உள்நாட்டு வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதைப்போல ஆன்லைன் வர்த்தகம் என அரசு வணிகர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தோல்வி எனத் தெரிந்த பிறகும் இந்தக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் இந்தக் கொள்கைகளை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும்.

முந்தைய செய்திஐ.நா போர்குற்ற அறிக்கையை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளவுள்ள உண்ணாநிலை போராட்டம்
அடுத்த செய்திபோர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்! – கொழும்பில் பிளேக் வலியுறுத்தல்