ஐ.நா அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடாது! அழிவுக்கே வழி வகுக்கும்!- பசில் எச்சரிக்கை

20

ஐ.நா.சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ். மாவிட்டபுரத்தில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான ஆரம்ப நிகழ்வு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவிட்டபுரத்தில் 9 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3511 குடும்பங்களளைச் சேர்ந்த 12274 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அப்பாதுத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்ரின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த உயர்பாதுகாப்பு வலயத்தில் தமது வீடுகளை கொண்டுள்ள குடும்பங்களை அழைத்துவந்த சிறீலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவினரும், கூட்டத்தில் பங்குபற்ற வைத்திருந்தனர்.

அமைச்சர் பசில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் எப்பகுதியிலும் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை; சமாதான வலயங்களே இல்லை என்கிற ஜனாதிபதியின் செய்தியுடனேயே தான் இங்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்தார். எதிரிகள் எவரும் இல்லாத காரணத்தால் ஒரே நாட்டில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வதால் பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவை ஏதும் இல்லை என்றார் அவர்.

மீண்டும் எதிரிகளுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திககளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. வெளிநாட்டின் உதவியுடன் வந்த ஒப்பந்தத்தால் இந்த நாட்டில் சமாதானம் வரவில்லை. 30 வருடங்களின் பின்னர் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுத்தான் இந்த மண்ணை இன்று உங்களிடம் கையளிக்கிறார்கள்.

இங்கு மீளக்குடியமரும் மக்கள் வெளிநாடுகள் திணிக்கும் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு துணைபோகக் கூடாது. அது அழிவுக்கே வழி ஏற்படுத்தும் என்று அமைச்சர் பசில் கூறினார்.

இந்தப் பகுதியில் மீள்குடியமர்வை நீண்டகாலத்துக்கு முன்பே செய்வதற்குத் திட்டமிட்ட போதும் சிலரின் சதி வேலை காரணமாக அது சாத்தியப்படாமல் போனதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அந்தச் சிலர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

அத்துடன், இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டபோதும், அவர்களை பசில் பேச அனுமதிக்கவில்லை.

எனினும் துணை இராணுவக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி

தமிழ்வின்

முந்தைய செய்திமுற்றாக கைவிடப்பட்ட நிலையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] ஈரோட்டில் நடைபெற்ற மே 18 பொதுக்கூட்டம் குறித்தான கலந்தாய்வு கூட்டம்.