கொசோவோ உருவாக்கப்பட்டது போன்ற செயற்பாடுகளே சிறீலங்காவில் நிகழ்கின்றன: கொழும்பு ஊடகம்

24

யூகோஸ்லாவாக்கியாவில் தலையீடுகளை மேற்கொண்டு எவ்வாறு கொசோவோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதோ அதனை ஒத்த செயற்பாடுகளே சிறீலங்காவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சேபியர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்தே ஐ.நா அங்கு தலையீடுகளை மேற்கொண்டிருந்தது என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சிறீலங்கா அரசு மற்றும் விடுதலைப்புலிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், 95 விகிதமான குற்றச்சாட்டுக்கள் சிறீலங்கா அரசு மீதே சுமத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீது கண்துடைப்புக்காக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் பிரிவுத்தலைவர் கௌசல்யன் கொல்லப்பட்டபோதும், ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி ஆனான் அந்த கொலை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது, மூன் சிறீலங்கா தொடர்பில் தனது ஆலோசனைக்குழுவை அமைத்துள்ளார். இது ஐ.நாவின் சட்டங்களை மீறும் செயல். சிறீலங்கா அரச தலைவருடன் இணைந்து மூன்  2009 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் காணப்பட்ட விடயங்கள் பலவற்றை சிறீலங்கா அரசு நிறைவேற்றி வருகின்றது.

ஐ.நாவில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும், சில வசதிபடைத்த நாடுகளே அதன் போக்கை தீர்மானிக்கின்றன.  அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமுமே ஐ.நாவின் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன. இந்த நாடுகள் உலகின் 20 விகிதமான சனத்தொகையையே கொண்டுள்ளன.

இந்த நாடுகளே சிறீலங்கா மீதான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களுக்கு ஆதரவாக அவர்களிடம் நிதியை பெற்று இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை என்பனவும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும், சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற பெரிய நாடுகளும் 80 விகிதமான சனத்தொகையை கொண்டுள்ளபோதும் அவை சிறீலங்கா தொடர்பில் வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை.

இந்த நாடுகளை தொடர்புகொள்ளாது, பான் கீ மூன் நிபுணர் குழுவை அமைத்தது, விடுதலைப்புலிகளின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்றது. இந்த திட்டத்திற்கு அமைவான அதிகாரிகளையே குழுவிலும் மூன் நியமித்துள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று உறுப்பினர்களும் சிறீலங்காவுக்கு எதிரான கருத்தை முன்வைத்து வந்தவர்கள்.

சிறீலங்கா முன்னர் அமைந்த அனைத்துலக நிபுணர் குழுவில் அங்கம் வகித்த தருஸ்மன் சிறீலங்கா மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளியேறியிருந்தார். ஸ்ரீவன் ரட்னர் ஈழத்திற்கு ஆதரவான கருத்தை கொண்டுள்ளவர். ஜஸ்மின் சுகா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெருமளவான நிதியை பெற்றுவருவதுடன், சிறீலங்காவுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டவர்.

யூகோஸ்லாவாக்கியாவில் தலையீடுகளை மேற்கொண்டு எவ்வாறு கொசோவோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதோ அதனை ஒத்த செயற்பாடுகளே சிறீலங்காவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சேபியர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்தே ஐ.நா அங்கு தலையீடுகளை மேற்கொண்டிருந்தது. ஐ.நாவின் நடவடிக்கையில் கொசோவோவுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் மாட்டி அத்திசாரி முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரே சேர்பியாவில் இருந்து கொசோவோவின் பிரிவுக்கு வழியமைத்தவர்.

பின்லாந்தின் முன்னாள் பிரதமரான அவரை சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா, எரிக் சொல்ஹெய்முக்கு பதிலாக கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்.

சிறீலங்காவுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் பலவீனமான ஏனைய நாடுகளை எச்சரிக்க மேற்குலகம் முற்படுகின்றது. இந்தியாவையும், சீனாவையும் பலவீனப்படுத்துவதற்கு சிறீலங்காவை தளமாக அவர்கள் தெரிவுசெய்துள்ளனர். ஐ.நாவை அதற்கு பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஈழம் நியுஸ்

முந்தைய செய்திமே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.
அடுத்த செய்திகொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.