டாஸ்மாக்கில் தமிழ்நாடு பாஸ்மார்க்!

34

“எந்தத் துறையிலயாவது நம்ம ஊரு உருப்பட்டிருக்கா’ என, யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, “சரக்கு’ விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.

அந்த, “சாதனை’ வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள். இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (பொதுவாக “குடிமகன்’களால், “ஹாட்’ என அழைக்கப்படுவது), பீர்களும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருந்துணையாக இருப்பது, “டாஸ்மாக்’ மூலம் கிடைக்கும் வருவாய் தான். நலத்திட்டங்கள் குறைவற நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனாலோ என்னவோ, ஆண்டுதோறும் விற்பனையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கடந்த, 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 13 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010 – 11ம் ஆண்டில் இந்த விற்பனை, 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் மூலம், ஓராண்டில் சரக்கு விற்பனை, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஐ.எம்.எப்.எல்., விற்பனை, 4 கோடியே 8 லட்சம் பெட்டிகளில் இருந்து, 4 கோடியே 78 லட்சம் பெட்டிகளை எட்டியுள்ளது. இது 17 சதவீதம் அதிகம். பீர் விற்பனை 2 கோடியே 42 லட்சம் பெட்டிகளில் இருந்து, 2 கோடியே 70 லட்சம் பெட்டி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, 11 சதவீதம் உயர்வு. அதற்குள் அயர்ந்துவிட வேண்டாம். இன்னும் சில, “கிக்’கான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. “கேஸ்’ எனப்படும் ஒரு பெட்டி சரக்கை, 40 பேர் குடிக்கலாம்.

அந்த வகையில், 2009-10ல், சராசரியாக ஒரு நாளைக்கு, 63 லட்சம் பேர் குடித்தனர்; ஆம்! ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். “மப்’பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், “குடிமகன்’களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன? சியர்ஸ்!

பீர் தட்டுப்பாடு ஏன்? “ஹாட்’ என, “குடிமகன்’களால், தவறாக உச்சரிக்கப்படும், “ஹார்ட்’ பற்றி பேசிவிட்டு, “கூல்’ சமாசாரமான பீர் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? பெரும்பாலும், சைவப் பட்சினிகளாலும், இளம்பெண்களாலும், விரும்பிக் குடிக்கப்படுவது பீர். “கோடை வெப்பத்தைத் தவிர்க்க, இளநீர் குடிப்பவன் கோமாளி’ என்றழைக்கப்படும் இந்தக் காலத்தில், “தினம் ஒரு பீர் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது’ என, டாக்டர்களே பரிந்துரைக்காத குறை. அந்த அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது பீர் விற்பனை. சராசரியாக இன்று, ஒரு நாளைக்கு 2 லட்சத்து, 52 ஆயிரத்து, 800 பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. இந்த விற்பனை இன்னும் எகிறியிருக்கக் கூடும். சில காரணங்களால் அது நிறைவேறாமல் போய் விட்டது. தமிழக மக்களின் பீர் தாகத்தைத் தீர்க்க, மோகன், பாலாஜி, எம்பீ என, மூன்று பீர் உற்பத்தி நிறுவனங்கள் தான் களத்தில் உள்ளன.

இந்த அவலத்தைப் போக்க, எஸ்.என்.ஜே., ப்ரூவரீஸ் என்ற புதிய நிறுவனம், உரிமம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. இயங்கி வரும் மூன்றில், மோகன் ப்ரூவரீஸ் நிறுவனம், தன் உற்பத்தித் தொழிற்சாலையை, சென்னை வளசரவாக்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால், அந்நிறுவனத்தின் பீர் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டுக்கு, இது ஒரு காரணம். பொதுவாகவே, கோடை காலத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டைப் போக்க, வெளிமாநிலங்களில் இருந்து பீர் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இது, உள்ளூர் விற்பனையில், 20 சதவீதம் இருக்கும். தற்போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வெளிமாநில பீர் வாங்க முடியாமல், “டாஸ்மாக்’ நிறுவனம் தவித்துக் கொண்டிருக்கிறது; இதுவும் ஒரு காரணம். “குடிமகன்களின் அடிப்படை உரிமையில் தேர்தல் கமிஷன் தலையிடுகிறது’ என, நம்மூர் அரசியல்வாதிகள் இதைத் தான் சொன்னார்களோ!

நன்றி: தினமலர்

முந்தைய செய்திமே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.
அடுத்த செய்திதொடரும் இந்தியாவின் துரோகம் ! நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு.