தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.

72

புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பவேயில்லை. இதனால் மற்ற மீனவர்கள் அவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் காணாமல் போன மீனவர்களில் மூன்று பேரின் கால் இல்லாத உடல்கள் கரை ஒதுங்கின. நான்காவது மீனவரான மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாமல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது. இது குறித்து ராமநாதபுரம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்துவிட்டு இது மாரிமுத்துவின் உடல் தான் என்று உறுதி செய்தனர். இதற்கு காரணம் இலங்கை கடற்படையினர் தான் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில் கரை திரும் பாததால் குடும்பத்தினர் தவித்தனர்.
இந் நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பூங்கடி தீவு கடற்கரையில் விக்டரின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்து விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் அந்தோணிராஜ், ஜான்பால் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின.

இதில் ஜான் பாலின் இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. தலையில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது.இதேபோல் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட விக்டர் உடலிலும் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இறந்த 3 மீனவர்களின் குடும்பங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா ரூ.25,000 வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியாத இலங்கை கடற்படையினர் ஆத்திரமடைந்து அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கி பிடித்து அவர்களை தாக்கியுள்ளனர். இதில் 4 பேரும் படகிலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு மீனவர்களின் உடலையும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழக கடல் எல்லையில் வீசி உள்ளனர். இறந்துபோன விக்டர் உடலில் 16 இடங்களில் படுகாயமும் காலில் கல்லை கட்டி கொலை செய்த அடையாளமும் உள்ளது என்றார்.

கடந்த வாரம் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி இனி மேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது.