ராஜபக்சே அரசு தயாரித்துள்ள ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பு வாழ் தமிழர்களை இலங்கை உளவுப் பிரிவு போலீஸார் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நெட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி…
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா.வுக்கு அனுப்ப ராஜபக்சே அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கையெழுத்து வேட்டையை அது தொடங்கியுள்ளது.
இந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பில் வசிக்கும் தமிழர்களை இலங்கை காவல்துறையின் உளவுப் பிரிவு மிரட்டி வருகிறது. கையெழுத்துப் போடாதவர்களை உடல் ரீதியாகவும், மிரட்டல் மூலமும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது போலீஸ்.
2 நாட்களுக்கு முன்பு கோட்டைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை அழைத்த போலீஸ், அவரை மனுவில் கையெழுத்திடுமாறு மிரட்டியது. அவர் மறுக்கவே, போலீஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை ராணுவம் செய்த மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.