மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஜக்கிய நாடுகள் குழு ஜெனிவாவில் கூடியது. அப்போது இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அங்கு கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், எனவே இலங்கை அரசே ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நாடு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்கு பாராட்டு தெரிவித்தும், அங்கு மனித உரிமைகள் மீறப்படவில்லை என்றும் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கையை பாராட்டி கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழு ஈழத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு போர்க்குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான செயல்களையும் கொடூரமாக நடத்தி இருப்பது உண்மைதான் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் விசாரித்த தீர்ப்பாயமும், இதே கருத்தை வலியுறுத்தி இருந்தது.
ஈழப்போரில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழர்களும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க மத்திய அரசு உதவிய நிலையில், இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று ஐ.நா.குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
எனவே மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இனியும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை தொடராமல் ஜ.நா.குழு சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். போர்க்கொடுமைக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 21 ந் தேதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.