இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டேயாக வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்

19

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறி அரசின் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறது அமெரிக்கா. போர்க்குற்றங்களை யார் செய்தார்கள் என்பது பற்றிக் கவலையில்லை, செய்தவர்கள் அவற்றுக்குப் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்குள், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவது இது இரண்டாவது தடவையாகும்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக் கூறுதல் என்பது மிக முக்கியமானது என்று தெரிவித்தார், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்கத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக். போரின் இறுதி நாள்களில் நீதிக்குப் புறம்பான செயல்கள் இடம்பெற்றமை மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்துக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். அவற்றை யார் செய்தார்கள் என்பது ஒரு விடயமே இல்லை. அவற்றுக்குக் காரணமானவர்கள் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்றார் பிளேக்.

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நியமங்களுக்கு நிகராக விசாரணைகளை இலங்கை அரசு நடத்தவில்லை என்றால், அது சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றின் முன்பாக இழுத்து வரப்படும் அபாயம் உள்ளது என்று அவர் அப்போது எச்சரித்திருந்தார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஆசிய சமூகத்தில் சிறிலங்கா என்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிளேக் இக் கருத்துக்களை வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்னவையும் உடன் வைத்துக் கொண்டே அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்திFull text of WikiLeaks cable on trust vote controversy
அடுத்த செய்திSeeman about Raghul gandhi