டக்ளஸ் தேவானந்தாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உச்ச நீதி மன்றம் உத்தரவு.

37

சென்னை சூளைமேட்டில் கடந்த 1986-ம் ஆண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற டக்ளஸ் சிங்களர்களுக்கு ஆதரவாளராக மாறினார். அதன் பயனாக ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் வராததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்ற வாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.   கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதனால் பயந்துபோன டக்ளஸ் தனக்கு எதிரான கைது வாரண்டு உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்தார். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடந்தது. அப்போது டக்ளசுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து டக்ளசுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். டக்ளஸ் ஐகோர்ட்டில் சரண் அடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்