சமரசம் என்ற பெயரில் சரணாகதி! – தினமணி

25

சமரசம் என்ற பெயரில் சரணாகதி!

இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும் சமரசமாகிக் “கை’ கோத்திருக்கிறது. “”நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், தங்களது ஆறு அமைச்சர்களும் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்யப் போவதாகவும் அறிவித்த தி.மு.க. தலைமை, இப்போது காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பது, காங்கிரஸôர் மத்தியில் மகிழ்ச்சியையும், தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

“”காங்கிரஸ்காரர்களை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடிப் பார்க்க வேண்டும்” என்று வெளிப்படையாகவே விமர்சித்த தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான இ.ஏ.பி. சிவாஜியில் தொடங்கிப் பெருவாரியான தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு சுமை என்று கருதும் நிலையில், தி.மு.க. தலைமை எப்பாடுபட்டாவது காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது ஏன் என்பதுதான் பலருக்கும் புதிராக இருக்கிறது.

“”கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?” என்று முதல்வரிடம் கேட்டதற்கு, “அதுவும் ஒரு காரணம்’ என்று முதல்வர் பதிலளித்தது முதலே, காங்கிரஸ் – தி.மு.க. உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் காரணம், தொகுதிப் பிரச்னை அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் தில்லி வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.

அமைச்சர்கள் ராஜிநாமா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குப் பிரச்னைகள் அடிப்படையிலான ஆதரவு என்று தி.மு.க. அறிவித்தவுடன், காங்கிரஸ் தலைமை பயந்து போய் சமரசம் பேச சென்னைக்குத் தனது தூதுவரை அனுப்பும் என்று எதிர்பார்த்த தி.மு.க. தலைமைக்கு ஒரே அதிர்ச்சி.

காங்கிரஸ் தலைமையிடமிருந்து எந்தவித சமிக்ஞையும் வரவில்லை என்பது மட்டுமல்ல, கிணற்றில் போட்ட கல்லாகப் பிரதமர் அலுவலகம் கூட இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெüனம் சாதித்துவிட்டது.

தங்களது அறிவிப்பு வெளியானவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்தோ, சோனியா காந்தியிடமிருந்தோ தொலைபேசி வரும் என்று காத்திருந்த முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருத்த ஏமாற்றம். வேறு வழியே இல்லாமல் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மூலமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைத் தொடர்பு கொண்டு, ஏதாவது சமரசத்துக்கு வழி தேடும் முயற்சியில் ஈடுபட்டது தி.மு.க. தலைமை.

இந்த நிலையில்தான், தங்களது குடும்பத் தொலைக்காட்சிச் சேனல்களின் நிருபர்கள் மூலம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டு, அவரும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று பதிலும் அளித்தார். பிரணாப் முகர்ஜியின் பதில், நீரில் மூழ்குபவனுக்கு நாணல் கிடைத்தது போலத் தி.மு.க. தலைமைக்குத் தெம்பை அளித்தது. அதற்குப் பிறகுதான் தி.மு.க. தலைமையிடம் காணப்பட்ட இறுக்கம் குறைந்தது என்று கூறப்படுகிறது.
எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. – காங்கிரஸ் உறவு துண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் முனைப்புக் காட்டியது மத்திய உர, ரசாயன அமைச்சர் மு.க. அழகிரியும், பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸூம்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

“”துணை முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை, தங்களது குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் “ஸ்பெக்ட்ரம்’ மேகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசின் ஆதரவும், அமைச்சர் பதவிகளும் தேவை என்கிற அளவில் மட்டும்தான் காங்கிரஸ் உறவைப் பார்க்கிறார். ஆனால் மு.க. அழகிரியின் பிரச்னை அதுமட்டுமல்ல. அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணி அமைத்தது முதலே, தென் மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுமானால், தி.மு.க. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் இல்லாமல் போட்டியிடாமல் இருப்பதுதான் நல்லது என்கிற நிலைமை. அதனால்தான் அவர் எப்படியும் காங்கிரஸூடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைமையை வற்புறுத்தினார்” என்கிறார்கள்.

காங்கிரûஸப் பகைத்துக் கொள்வதால் தேவையில்லாமல் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கக் கூடும் என்கிற பயம் மு.க. அழகிரிக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல, டாக்டர் அன்புமணி ராமதாஸூம் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்பதில் குறியாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அவர் சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.

சோனியா காந்தியுடனான சந்திப்பு தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. சோனியா காந்தி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி மாறனும், மு.க. அழகிரியும் தடுமாறியதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால், காங்கிரஸூக்கு தேசிய அளவில் தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாக சோனியா கடிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

“”வேடிக்கை என்னவென்றால், சமரசம் நடைபெறும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு தில்லியில் இருக்கவில்லை. அவர் சென்னை திரும்பி விட்டிருந்தார். சாதாரணமாக, இது போன்ற சமரசப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.க. சார்பில் அனுப்பப்படும் கனிமொழியும் தில்லியில் இருந்தும் சோனியாவை சந்திக்கச் செல்லவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க மு.க. அழகிரியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும்தான் காரணம்” என்கிறார்கள் தில்லி பத்திரிகையாளர்கள்.

சென்னையில் வீர வசனம் பேசிய தி.மு.க., தில்லியில் தலைகுனிந்தபடி காங்கிரஸ் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டதற்குப் பின்னணி இருக்கிறது. 63 இடங்கள் கேட்பது நியாயமா என்று கேட்டு, அமைச்சர்கள் ராஜிநாமா செய்யப் போவதாக பயமுறுத்திய தி.மு.க. இப்போது அதே 63 இடங்களைக் காங்கிரஸூக்கு ஒதுக்கிக் “கை’ குலுக்கிக் கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் இதற்கு ஒத்துக் கொண்டது?

“”தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெறப் போகும் தொகுதிகளை நாங்கள் தனியாகப் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால், நாங்கள் 234 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு, அதிகபட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனைய 204 தொகுதிகளிலும் “டெபாசிட்’ இழக்க நேரிடும். இப்போது 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் “டெபாசிட்’ இழந்தது என்கிற அவமானம் ஏற்படாது”- இதுதான் காங்கிரஸ் தலைமை போட்ட ராஜதந்திரக் கணக்கு.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் தி.மு.க. அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

காங்கிரஸ் தான் கேட்ட 63 தொகுதிகளையும் பெற்றுக் கொண்டது. கூட்டணி ஆட்சி என்பதையும் உறுதி செய்துவிட்டது.””என்ன சிக்கல் தீர்ந்ததா?” என்று ஒரு மூத்த தி.மு.க. தலைவரிடம் கேட்டபோது அவர் தந்த பதில்- “”இல்லை. தி.மு.க. கூடாரத்தில் காங்கிரஸ் ஒட்டகம் மூக்கை நுழைத்திருக்கிறது. இனிமேல்தான் சிக்கலே தொடங்கப் போகிறது…” என்று வருத்தத்துடன் சொன்னார். பெருவாரியான தி.மு.க. தொண்டர்களின் மனோநிலையும் அதுதான்!