காவல்துறை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு பணம்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்

22

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலேயே வாக்காளர்களுக்கு பணம் கடத்தப்பட்டதாகவும், அந்தக் காவல்துறை அதிகாரிகள் விவரம் தெரியவந்ததும் தேர்தல் ஆணையம் அதிர்ச்சிய அடைந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில், காவல்துறை அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாகன சோதனை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் தில்லை நடராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக வெற்றிச் செல்வன் என்ற வழக்கறிஞர் பொது நலவழக்கு தொடர்ந்திருந்தார்.

‘தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு வாகன சோதனை செய்வதற்கு பறக்கும் படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழுவின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை நீதிபதியிடம் அளித்தார்.

பின்னர் அவர் வாதிடுகையில், தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.

எனினும், போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்தப் பணம் எங்கிருந்து பெறப்பட்டது? எங்கே எடுத்து செல்லப்படுகிறது? எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது? பணத்தை கொண்டு செல்ல கூறியது யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின்றனர் என்பது தெரிய வந்தது.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

இதுவரை வாகன சோதனை தொடர்பாக 2,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாதியுள்ளன.

போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தோல்வி அடைய செய்யும் விதமாக சில காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப்போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக்காத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்,” என்று வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்.

நன்றி

தேர்தல் விகடன்

முந்தைய செய்திராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 29-3-2011
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] 29-3-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.