நாம் தமிழர் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கரூரில் நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெருவாரியாக திரண்டிருந்த மக்களின் முன்னே “கடைசித்துளி இரத்தம் இருக்கும் வரை ஒயமாட்டேன், தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்காமல் சாகமாட்டேன் என்று வீர முழக்கமிட்டு சபதமெடுத்தார். மண்ணின் மீதும் மக்களின் மீதும் அக்கறை இல்லாத காங்கிரசை,ஏழைகளை வறுத்தெடுத்து முதலாளிகளை வளர்த்தெடுக்கும் காங்கிரசை,ஆதர்ஸ் ஊழல்,காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், என்று ஊழலை தேசியமயமாக்கிவிட்ட காங்கிரசை அழித்தொழிப்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மை இலட்சியம் என்றார்.
தமிழ் நாட்டின் மக்களுக்காக ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி இன்று தன் குடும்ப மக்களுக்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.கொள்ளையடித்ததை காப்பாற்றுவதற்காக மத்தியில் ஆளும் காங்கிரசை தூக்கி பிடிக்கிறார்.திமுக-காங்கிரஸ் உறுதியான கூட்டணி அல்ல, அது ஊழல் கூட்டணி, அது கெட்டியான கூட்டணி அல்ல, பணப்பெட்டிகான கூட்டணி.பிரபாகரனின் தம்பிகளாகிய நாங்கள் பிச்சை எடுத்தாலும் பணத்திற்காக இனத்தை காட்டி கொடுக்க மாட்டோம்.
வரவிருக்கும் தேர்தலில் கை சின்னத்திற்கு எதிராக இரட்டை இலைக்கு வாக்கு கேட்பேன், கை சின்னத்திற்கு எதிராக செருப்போ,விளக்கமாரோ சின்னமாக நின்றாலும் அதற்கும் வாக்கு கேட்பேன், எங்களுக்கு சின்னம் முக்கியம் அல்ல காங்கிரசை வீழ்த்தும் எண்ணமே முக்கியம்.“விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது”- என்று முழங்கிய கியூபா-வின் பிடல் காஸ்ட்ரோ இல்லையென்றால் கியூபா இன்று அமெரிக்காவின் அங்கமாக ஆகியிருக்கும் அது போல எங்கள் அண்ணன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் இன்று உலகத்தில் தமிழ் இனத்திற்கென்று தனி அடையாளம் இருந்திருக்காது.அவர் வழியில் நின்று, அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் இளைஞர்களை ஒருங்கிணைத்து மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கவே இந்த நாம் தமிழர் கட்சி. இது அரசியல் யுத்தம், இரத்தம் சிந்தாத புரட்சி போர். விரைவில் தமிழ்நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்.
நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் பிரபு, செல்வ.நன்மாறன், குணசீலன், சத்யமூர்த்தி, கள் இயக்க தலைவர் நல்லுசாமி, மற்றும் திரளான பொதுமக்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது