கச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு – தினமணி

93

கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கவுள்ள பகுதியைக் குறிக்கும் வரைபடம்.

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.

இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த இங்கிலாந்து நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும். மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றார் அவர்.இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.

பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்.

கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்.

மேலும், மீன் இனங்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லவும் வாய்ப்புள்ளது என பல ஆபத்துகளைப் பட்டியலிட்டார் அவர்.

நன்றி

தினமணி

முந்தைய செய்திவீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
அடுத்த செய்திதமிழ் தேசிய உணர்வாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்