நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் இருவர் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற்படையினர் ஜெயக்குமாரை தாக்கிக் கொலை செய்துள்ளனர். மற்றும் இருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் இலங்கை ராணுவம் செய்துள்ள இரண்டாவது கொலை இது. இது போக பலமுறை மீனவர்களின் படகுகள் தாக்கப்பட்டும் அவர்களின் வலை அறுக்கப்பட்டும், மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டும், இன்னும் சொல்ல முடியாத பல சித்திரவதைகளை அனுபவித்தும் உள்ளனர். இன்றைய மீனவர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதியும், காங்கிரசும் தான். இவர்கள் அளிக்கும் ஒத்துழைப்பில் தான் சிங்களக் கடற்படை வெறியாட்டம் போடுகிறது.
திருப்பதிக்கு கோயிலில் வழிபாடு செய்ய வரும் ராஜபக்ஷேவுக்கு இந்திய அரசு முழுமையான பாதுகாப்பையும் மரியாதையையும் வழங்குகின்றது. ஆனால் வேதாரண்யக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் தமிழக மீனவனை ராஜபக்சேவை முப்படைத் தலைவராக கொண்ட இலங்கைக் கடற்படை கொலை செய்கிறது. இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா? தமிழக முதல்வர் கருணாநிதியோ பெயரளவுக்கு கண்டனத்தையும் தந்தியையும் அடித்து விட்டு கடமையை முடித்து விடுகிறார். தேர்தல் விரைவில் வரப் போவதால் பயந்து போய் 5 லட்சம் நட்டஈடு வழங்குகியுள்ளார். இதற்கு நிரந்தர தீர்வு குறித்த அக்கறை தமிழக முதல்வருக்கு துளியளவும் இல்லை. நேற்று கூட இந்திய ராணுவ கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ஜே.பி.சர்மா தமிழக முதல்வரைச் சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். அவரிடம் கருணாநிதி இது குறித்து எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழக முதல்வரோ காங்கிரஸ் கட்சியின் பிரணாப் முகர்ஜியுடன் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது தான் தமிழனின் உயிர் மீது கருணாநிதிக்கு இருக்கும் அக்கறையா? தனது கோரிக்கைகள் அனைத்தையும் முதலில் ஏற்றுக்கொள்ள தயங்கும் காங்கிரஸ் கட்சி பிறகு ஏற்றுக்கொள்ளும் என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அப்படியானால் இது வரை மீனவர் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கருணாநிதி பேச வில்லையா? அல்லது அனைத்து மீனவனும் செத்த பின்பு பேசிக் கொள்ளலாம் எனக் காத்திருக்கிறாரா? இந்த இழிநிலை நீடித்தால் வரும் தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலை தான் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்படும்.