தொடர் விலை உயர்வு காரணமாக, கடந்த 5 நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து மும்பை வந்து இறங்கிய 200 டன் வெங்காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கியுள்ளது.பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டுவர, மகாராஷ்டிர மாநில அரசின் தடைநீக்க சான்றிதழ் வேண்டும். தேவையான தகவல்களை சுங்க வரி அலுவலத்திற்கு வழங்குவதில் மாநில அரசு தாமதம் செய்து வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை, சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தான், தடைநீக்க சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், ஈரப்பதமாக உள்ள காரணத்தால் அவை அழுகத் தொடங்கியுள்ளது. வெங்காயப் பற்றாக்குறை, விலை உயர்வு காரணமாகத் தான் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது, அவைகளும் அழுகி வருவதால் பெரு நகரங்களில் மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விலை ஒரு கிலோவிற்கு ரூ.60ஆகவும், மற்ற நகரங்களில் ரூ.65 ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு கிலோ ரூ.80 என்றவாறே விற்பனை செய்யப்படுகிறது.