ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் – செந்தமிழன் சீமான்

15
ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர்
மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் திருவாய் மலர்ந்திருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் விரோத சோனியா காங்கிரஸின் திமிர்வாதப் போக்கையே ரெட்டியின் அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம்.
இந்த பெட்ரோல் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – என்று காங்கிரஸ் அறிவித்த ஒரே வாரத்தில் ரெட்டியின் விசித்திர விளக்கம் வெளிவந்துள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் வடித்தது முதலைக்கண்ணீர் என்பது ஐந்தே நாளில் அம்பலமாகி விட்டது. மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக இப்படியெல்லாம் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக்கொண்டு, பெட்ரோல் மீதான மத்திய மாநில அரசுகளின் அநியாய வரிவிதிப்புகளை முழுமையாகக் கைவிடுவதன் மூலம், பெட்ரோல் விலை பாதியாகக் குறைய வழிவகுக்க வேண்டும் என்று மத்திய  காங்கிரஸ் அரசையும், மாநில தி.மு.க. அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, 6 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 11 மாதத்தில் 13 ரூபாய் உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால், 2011ம் ஆண்டுக்குள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயாக உயர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.  விலைவாசிக் கொடுமையில் சிக்கி மூச்சுத் திணறும் நடுத்தரப் பிரிவு மக்களால் இப்படியொரு அநியாய விலை உயர்வை எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும்?
இந்த விலையேற்றம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோருவதன் மூலம்,தன்மீதான பழியை அடுத்தவர் மீது சுமத்த முயல்கிறது காங்கிரஸ். கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடித்துவிட்டு,கொள்ளையடித்ததற்கான காரணத்தைச் சொல் – என்று  நாட்டை ஆளுகிற சோனியா காங்கிரஸ் குரல்கொடுப்பது  சரியான கேலிக்கூத்து. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள  அனுமதித்த இந்த அதிமேதாவிகளுக்கு, அந்த நிறுவனங்களிடம் கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது?
2ஜி அலைக்கற்றை உரிமத்தை மட்டமான விலைக்கு விற்றுவிட்டு,  மக்களுக்குத் தேவைப்படும்  அத்தியாவசியப் பொருட்களை அநியாய விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறது, சோனியாவின் எடுபிடியாகவே மாறிவிட்ட  மன்மோகன் அரசு. அந்த மக்கள் விரோத அரசின் அனைத்து வசதிகளையும் கூட்டாளி என்கிற முறையில் வெட்கமேயில்லாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம்.  மம்தா பேனர்ஜி அளவுக்குத் துணிவாகக் கருத்துச் சொல்லும் சுயமரியாதையைக் கூட,  பதவி நாற்காலிக்காக உதறிவிட்டு நிற்கிறது அது.
பெட்ரோல் விலை உயர்வுக்காக காங்கிரஸைக் கடுமையாகக் கண்டிக்கும் இதே நேரத்தில், சுயமரியாதை உள்ளிட்ட சகல மரியாதைகளையும் பதவிகளுக்காகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தலைகுனிந்து நிற்கும் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் நாம் தமிழர் கட்சி சார்பில்  தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்.
சீமான்
நாம் தமிழர் கட்சி